மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்!

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி கண்டு வருவதாக மாநகரசபை ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர தூய்மையாக்கல் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,


”கடந்த வருடமும் இவ்வருடத்தின் ஆரம்பித்திலும் மட்டக்களப்பில் இருந்து வந்த டெங்கு அச்சுறுத்தல் சுகாதாரத் திணைக்களம் மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் கூட்டிணைந்த முயற்சியோடும் பொதுமக்களின் ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, தெருக்களிலும், வாவி, வடிகான்கள், போன்ற கண்ட கண்ட இடங்களில் மக்கள் கழிவுகளைக் கொட்டுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையம் தொடங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையுள்ள நகரின் முக்கிய தெருவான கோவிந்தன் வீதி முழுக்க காலை வேளையில் குப்பைத் தொட்டியாக காட்சியளிக்கும் நிலை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் நோயாளிகளும் நோயாளர்களது உறவினர்களும் பொலித்தீன் பைகளில் கழிவுகளைக் கட்டி வீதியோரத்திலும் கான்களுக்குள்ளும் வீசு விட்டுச் செல்கின்றனர்.

இது நகர அசுத்தத்திற்கும் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்றதாகவும் அமைந்து விடுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாளாந்தம் மட்டக்களப்பு நகர குடியிருப்பாளர்களும், நாளாந்தம் அலுவல்களுக்காக நகருக்கு வரும் பொது மக்களும் அக்கறை எடுக்க வேண்டும்” என வெள்ளத்தம்பி தவராஜா மேலும் தெரிவித்தார்.