வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டாம் – விஜித ஹேரத்

வரலாற்றில் நாட்டை பிரிப்பதற்கு தனது கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கியதும் இல்லை, வழங்க போவதும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தெரிவித்துள்ளது.

இதனை நாட்டு மக்களும், தேரர்களும் சிறந்த முறையில் விளங்கிக்கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் பிரசார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசியலில் ஓரங்கட்டப்பட்டவர்கள் இன்று தனது கட்சியின் நிலைப்பாட்டை திரிபுபடுத்தி வேறு விதமாக மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தி வருவதாக கூறினார்.

மேலும் தமிழ், சிங்களம், முஸ்லிம், பேகர் மற்றும் மலே ஆகிய மொழிகளை பேசுபவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையை ஏற்படுத்தவே தனது கட்சி வரலாற்றில் செயற்பட்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க அவர் முற்பட்டதாகவும், ஆனால் இன்று அவ்வாறு இணைப்பது சாத்தியமற்றது என தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே அவ்வாறு இல்லாமல் தனது கட்சி வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்காது எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டார்.
இலங்கையின் இறைமையை பாதுகாக்க மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் முன்னின்று செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.