தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர் அகரம் செ.துஜியந்தன்


தெற்காசிய வலயமைப்பு சமாதான நீதவான்களின் பேரவையினால் தெரிவு செய்யப்பட்ட சமாதான நீதவான்களுக்கு தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கையின் மூத்த அரசியல்வாதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கலந்து கொண்டார். இதன்போது சமாதானநீதவான்கள் 34 பேர்  தேசகீர்த்தி விருது வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைஞர் ஊடகவியலாளர் அகரம் செ.துஜியந்தன் தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1977ம் ஆண்டு சித்திரை மாதம் 11 ஆம் திகதி பிறந்த செல்லத்தம்பி துஜியந்தன் பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கலை இலக்கியம், சமூகம், சமயம் மற்றும் ஊடகத்துறையிலும் தனது பங்களிப்பை நல்கி வரும் இவர் பத்திரிகை வாயிலாக 250 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்துடன் கவிதை, சிறுகதை ஆகியவற்றையும் எழுதிவருகின்றார்.

பின் தங்கிய பிரதேசங்களுக்கு சென்று மக்கள் படும் துயரங்களை ஞாயிறு தினக்குரல் ஊடாக வெளிக்கொணர்ந்தமையினால் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதினை இரு முறை வென்றுள்ளார். சிறந்த சமூக அபிவிருத்திக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருதினை 2012ஆம், 2013ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

இவ் விருதினை கிழக்கு மாகாணத்தில் பெற்ற ஒரே ஒரு தமிழ் ஊடகவியலாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'விருந்து' எனும் சிற்றிதழ் ஒன்றை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்து கலை இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

மேலும் நாடகம், குறும்படம், பட்டிமன்றம், மிமிக்கிரி என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி பலரது பாராட்டைப்பெற்றவர்.  இவரது குறும்படங்கள் கூடுதலாக சமூக விழிப்புணர்வு சார்ந்தவையாக அமைந்திருப்பது சிறப்பு.
அந்த வகையில் விமோசனம், விரட்டியடி, வட்டி, யார்பிச்சைக்காரன், என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் விரட்டியடி குறுந்திரைப்படம் 2013ல் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பிரிவு நடத்திய குறுந்திரைப்பட போட்டியில் 1ஆம் இடம் பெற்று விருதினையும் 50ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டது.

குறும்படங்களை நடிப்பது, இயக்குவது, தயாரிப்பது என பல தரப்பட்ட ஆளுமை உடையவராக காணப்படும் இவர் மாணவர்கள் மத்தியில் கவிதை, சிறுகதை  மற்றும் ஒளிப்படக்கலை தொடர்பான பயிற்சி பட்டறைகளை நடத்துதல், இலக்கிய விமர்சனங்கள், நூல் வெளியீடுகளை நடத்துதல் என பல்வேறு கலை இலக்கியப்பணிகள் மற்றும் அகரம் எனும் அமைப்பை தோற்றுவித்து அதனூடாக வறிய மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கும் கரம் கொடுத்து உதவுதல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்து கலாசார அமைச்சு ஊடாக 2005ல் இந்தியா சென்று அங்கு ஆன்மீக பயிற்சிகளை பெற்றுக்கொண்டு 'இந்துப்பிரசாரகர்' என்ற பட்டத்தினை பெற்று வாழும் கலை பயிற்சிகளை வழங்குதல், இந்து ஆலயங்களில் ஆன்மீக பிரசாரங்களை மேற்கொள்ளல், சமயகட்டுரைகளை எழுதுதல் என சமயம் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்.

சமயம், சமூகம், கலை, இலக்கியம், ஊடகம் என பல துறைகளில் இயங்கிவரும் இவரை பாராட்டி 2016ல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 'இயங்கலைஞர்' பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று தெற்காசிய சமாதானநீதவான்களின் பேரவையினால் 'தேசகீர்த்தி' விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.