பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கேற்ப ஆசிரியர்களின் ஊதியங்கள் தீர்மானிக்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - கி. துரைராசசிங்கம்



பிள்ளைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் ஊதியங்கள் தீர்மானிக்கப்படும் என்கின்ற திட்டம் உருவாக்கப்படுமேயானால் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் உள்ள இடைவெளி குறைக்கப்படலாம், பிள்ளைகள் சித்தியடையும் விகிதமும் அதிகரிக்கும் என்று நான் நினைக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகளுக்கு போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளைகள் பெறக்கூடிய பயன்பாட்டைப் பெறுவதில் எமது பெற்றோர்கள் கூடுதல் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. எமது கல்வி விடயத்தில் நாம் இன்னும் ஒரு நிலையான அடைவினை அடையவில்லை. எமது பிரதேசங்களில் அதற்கான உத்வேகங்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும். இந்த நிலைமையை மாற்றுவதற்கு அனைவரும் உத்வேகத்துடன் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.

 எமது தற்போதைய நிலைமையில் என்னென்ன உத்திகளை, புத்திகளைக் கையாண்டு பிள்ளைகளின் கல்வி நிலையினை உயர்த்த வேண்டுமோ அவற்றைக் கையாள வேண்டும். காரணங்களையும் வறுமையையும் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பது எமது சோம்பேறித் தண்மையையே வெளிப்படுத்தும். இறைவன் அனைவருக்கும் ஒரே விதத்தில் தான் மூளையைப் படைத்திருக்கின்றான். ஆனால் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் விதத்தில் தான் மூளையின் செயற்பாடு அமையும். இதனை மாணவர்கள் தான் உணர வேண்டும்.

வகுப்பாசிரியர்களும் மாணவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை மெல்ல மெல்ல முன்னேற்ற வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சித்தியடையச் செய்கின்ற அளவிற்கேற்பவே அவர்களின் சம்பள அதிகரிப்பு இடம்பெறும் என்கின்ற திட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில் பிள்ளைகள் சித்தியடையும் விகிதம் அதிகரிக்கும் என நான் நினைக்கின்றேன்.

பிரான்ஸ் நாட்டிலுள்ள குடும்ப வைத்தியர்களுக்கு குடும்பத்தவர்களுக்கு நோய் ஏற்படும் வீதம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களது சம்பளத்தின் அளவு குறைக்கப்படும் அதே போன்று எமது நாட்டில் கல்வி கற்கும் பிள்ளைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் ஊதியங்கள் தீர்மானிக்கப்படும் என்கின்ற திட்டம் உருவாக்கப்படுமேயானால் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் உள்ள இடைவெளி குறைக்கப்படலாம் என நான் கருதுகின்றேன். தற்போதைய நிலையில் அவ்வாறான திட்டம் அமுல்ப்படுத்தப்படுமாயின் அநேகமான ஆசிரியர்கள் படி உயர்வு நிலையை அடைவது கடினமாகவே இருக்கும். இக்கருத்தானது என்னை ஒரு அக்னிப் பரீட்சைக்கு இட்டுச் செல்லாம் ஆனால் எமது சமுகத்தின் மாணவர்களை முன்னேற்றுவது என்பது எம் அனைவரினதும் ஒருமித்த பொறுப்பு என்ற ரீதியில் இக்கருத்தினை சற்று சிந்திக்க வேண்டும்.

அரசியல்வாதிகள், சமூக அமைப்பினர், பாடசாலை சமூகத்தினர் என்போர் பாடசாலையில் பௌதீக விடயங்களை கையாள முடியும். ஆனால் மாணவர்கள் விடயத்தில் ஆசிரியர்கள் நினைத்தால் மாத்திரமே முடியும். ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட விதங்களில் ஊக்குவிப்புகளைக் கொடுக்க வேண்டும். அந்த ஊக்குவிப்புகளோடு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது கடமைகளைச் சவாலாகக் கொண்டு செயற்பட முடியும்.

மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்வது ஆசிரியர்களுக்கே உரித்தான கடமை. இதுவே இந்த சமுகம் அவர்களுக்கு கொடுக்கும் கட்டளை. பிள்ளைகளின் தனித் தனித் திறமைகளைக் கண்டறிந்து மிகவும் நுணுக்கமாகவும், கவனமாகவும் பிள்ளைகளைக் கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.