கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் சிறந்த உத்தியோகத்தர்கள் தெரிவில மட்டு மாவட்டத்தில்; யோகேஸ்வரன் தம்பதிகளுக்கு முதலிடம்.

(ரவிப்ரியா)

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2015 - 2016ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார திணைக்களங்களில் சிறந்த முறையில் சேவையாற்றிய வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி விருது வழங்கும் வைபவம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.கே.முருகானந்தம் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ ஆளுனர் ரோகித்த போகல்லாகம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


இதில் கிழக்கு மாகாணத்தில் சிறந்த மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கான விருதில் முதல் இடத்தினை மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் திரு.சி.யோகேஸ்வரன் (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வெல்லாவெளி) அவர்களும் சிறந்த தாதிய உத்தியோகத்தருக்கான விருதில் முதல் இடத்தினை திருமதி. ரஜனி யோகேஸ்வரன் (ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி)  அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். கணவனும் மனைவியும் மாகாணத்திலே சிறந்த  அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கான விருதினை பெற்றுக்கொண்டமை அவர்கள் சேவைக்கு கிடைத்த  வெற்றியாகும்.

இதன்மூலம் அவர்கள பணியாற்றிய பிரதேசங்களுக்கு மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் அரச உத்தியோகம் வகிக்கும் தம்பதிகளுக்கு முன்னுதாரணமான வரலாற்றுப் பதிவையும் மேற்கொண்டுள்ளனர். குடும்பத்தைவிட தங்கள் கடமையை நேசித்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.