கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


 
சயிட்டம் தனியார் மருத்தவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பில் இடம்பெற்ற சயிட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்யக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீநாத் லியனாராச்சி தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிறு விஜேசேகர உட்பட மாணவ தலைவர்களை விடுதலை செய், வாக்களித்த ஜனநாயகம் இதுதானா? வெறித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம், சயிட்டம் கல்லூரியை தடை செய், கல்வியை விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தம்பிட்டடிய சுகதானந்த தேரர் மற்றும் லஹிறு விஜேசேகர ஆகியோரை சிறையிட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் போன்ற பதாதைகள் ஏந்திய வண்ணம் மாணவர்கள் கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதன் போது மாணவர் ஒன்றியத் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தருவோம் என்று கூறித் தான் ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து எட்டு வருடங்களாக இலவச கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையில் அண்மையில்  இடம்பெற்ற போராட்டத்தின் போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிறு விஜேசேகர மற்றும் தம்பிட்டிய சுகதாநந்த தேரர் மற்றும் ரயன் ஜயலத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு நல்லாட்சி என்று கூறி மக்களின் உரிமையைப் பறிக்கின்றது. மக்களின் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்ச்சியாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
திருட்டுப்பட்டக்கடை போன்றவற்றை ஆரம்பித்துள்ளது.

நாங்கள் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்வது கைது செய்யப்பட்ட மாணவ தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்தப் போராட்டமானது மாலபே சயிட்டம் திருட்டுப் பட்டக்டையை மூடும் வரையில் முடிவுறுத்தப்பட மாட்டாது. எமது தலைவர்களை சிறைப்பிடிப்பதனால் இந்தப் போராட்டத்தை நிறுத்தி விட முடியும் என நினைக்கக் கூடாது. எமது கோரிக்கை நிறைவு பெறும் வரையில் இந்தப் போராட்டத்தினை நிறுத்த முடியாது. இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்றே செயற்படுத்தப்படுகின்றது. இது வரையில் ரவி கருணாநாயக்கவுக்கு எந்தவகையில் நீதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் எமது மாணவ தலைவர்களுக்கு எந்த வகையில் நீதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த இடத்தில் தான் பிரச்சினை இருக்கின்றது. ஏழை எளிய மக்களுக்கு நீதி நடைமுறைப்படுத்தப்படுமிடத்து ரவி கருணாநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ போன்றோருக்கு ஏன் நீதி நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு இந்த நல்லாட்சி செயற்படுமேயானால் இந்த நல்லாட்சியின் நீதிக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.