பஸ்ஸின் சாரதி, நடத்துநர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி, நடத்துநர் மீது, திங்கட்கிழமை   (09) இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் சாரதியான பூகொட பிரதேசத்தைச் சேர்ந்த யு.ஏ.கே.ரி.ரணசிங்க (வயது 48), நடத்துநரான வரக்காப்பொல பிரசேத்தைச் சேர்ந்த ஜே.எம்.சமரசிங்க (வயது 38) ஆகிய இருவரும், படுகாயமடைந்த நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு டிப்போவுக்குரிய மேற்படி பஸ், காத்தான்குடியில் பிரயாணிகளை இறக்கி விட்டு, காத்தான்குடி டிப்போவுக்குச் சென்று கொண்டிருந்த போது, காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து இரவு 11 மணியளவில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சாரதி மற்றும் நடத்துநர் மீது முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன், அப்பகுதியிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளிலுள்ள சி.சி.டி.வி கமெராக்களை சோதனை செய்யப்படுகின்றன.

குறித்த பஸ்ஸின் மீது வெலிக்கந்த பிரசேத்தில் வைத்து ஏற்கெனவே கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.