மட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்கான பயிற்சி முறையியல் பயிற்சிநெறி.


 ( மட்டக்களப்பு மேலதிக நிருபர்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் தமது பயிற்றுவிப்பாளர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பயிற்சி முறையியல் பயிற்சி நெறி ஒன்றினை நேற்றைய தினம் திங்கட்கிழமை (16) ஏற்பாடு செய்திருந்தது.

அக்ரட் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இரண்டு நாட்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியில் மாவட்ட வள நிலையத்தினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கு கொண்டனர்.

ஒரு பயிற்சியாளருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் இப் பயிற்சி நெறியில் வழங்கப்பட்டன.

மனிதவள விருத்தி, சமூக அபிவிருத்தி, கிராம மட்ட அமைப்புகளின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகளை வழங்கும் வகையில் மாவட்ட பயிற்சியாளர் குழாம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறது.அதன் ஒரு பகுதியாகவே இந்த பயிற்சி முறையியல் பயிற்சி வழங்கப்பட்டது.

இவ் இரண்டு நாள் பயிற்சிநெறியின் வளவாளராக சிரேஸ்ட பயிற்சியாளரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய இணைப்பாளருமான அன்பழகன் குருஸ் பயிற்சிகளை வழங்கியதுடன், இதன் இணைப்பாளராக அக்ரெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன் செயற்பட்டார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த மனிதவள விருத்தியுடைய கிராமங்களை உருவாக்கும் வகையிலான பயிற்சிகளை எதிர்காலத்தில் இப்பயிற்சியாளர்கள் வழங்குவதற்குத் தயாராகியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் அக்டெட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்  சமூக அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி இணை உருவாக்கம் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மனித வள அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த சமூக அபிவிருத்தியை எட்டும் பொருட்டு பொது மக்கள்சார் சமூக நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துதல் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி இணை உருவாக்கம் திட்டத்தில் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தில் பயிற்சிகளைப் பெற்ற 30 பேரைக்கொண்ட பயிற்சியளர்கள் இவ் வள நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மனிதவள  அபிவிருத்தி தொடர்பான பயிற்சிகளுக்கான தேவைப்பாடுடைய அரச, அரச சார்பற்ற, தனியார் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் இந் நிலையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் பயிற்சிகளைகளையும், பயிற்சி ஒழுங்கமைப்புக்களையும், ஆய்வு சார் பணிகளையும் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நீடீத்து நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்திகளை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சித்திட்டமும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு-  இணைப்பாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம், சப்பல் வீதி , மட்டக்களப்பு, விலாசத்துடனோ resourcepoolbatti@gmail.com என்ற மின் அஞ்சலுடனும் தொடர்பு கொள்ள முடியும்.