கிராமப்புற நகர்ப்புற கல்வி நடவடிக்கைகள்


இன்றைய காலகட்டத்தில் கிராமப் புறங்களிலும் சரி நகர்ப்புறங்களிலும் சரி கல்வி நடவடிக்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தமையும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றமையும் பலரும் அறிந்த விடயமே. கல்வியின் முன்னேற்றத்திற்காக இன்றுவரை பல திட்டங்கள் செயற்பாடுகள் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் இவை சமுதாயத்தில் கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவரிடத்தும் எந்தளவு பிரதிபலனை அணிந்துள்ளது என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இலங்கையில் மொத்தமாக 10162 அரச பாடசாலைகளும் 353 தேசிய பாடசாலைகளும் காணப்படுகின்றன. 1943 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க அறிக்கையில் இலவசக் கல்வியின் தந்தையான C.W.W. கன்னங்கரா அவர்களால் இலவசக் கல்விக்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அத்தோடு இலங்கையில் முதன் முதலில் மத்திய மகாவித்தியாலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பற்றிய உலகப்பிரகடனம் கல்விக்கான உரிமையை முதன் முதலில் ஏற்றுக்கொண்ட சர்வதேச சமவாயமாக காணப்பட்டது.


இதன் பின்னரான காலப்பகுதியில் வறுமையான திறமைமிக்க மாணவர்களின் நலன்கருதி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பமானது. இத்திட்டம் மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவியாக அமைந்தது. அதன் பின்னர் சுயமொழிகள் போதனை மொழியாக மாற்றப்பட்டு பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் சமயப் பாடசாலைகளும் கையேற்கப்பட்டன.

இவ்வாறாக இலவசக் கல்வித்திட்டம் அறிமு அனைவரும் உணர்ந்து சிறந்த முறையில் கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்றத்தாழ்வு அற்ற சம உரிமையான கல்வி அனைவருக்கும் போதிக்கப்பட வேண்டும்.

இந்தவகையில் எமது நாட்டில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நிலவும் கல்வி நடவடிக்கைகளை நோக்கும்போது வேறுபாடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. கிராமப்புறங்களில் கல்விச் செயற்பாடுகளை நோக்கும் போது சில குறைபாடுகளை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட வசதிகள், கட்டிட வசதி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பொருட்கள் பற்றாக்குறை (உதாரணமாக விளையாட்டு பொருட்கள்) என்பன காணப்படுகின்றது. ஆசிரியர் பற்றாக்குறை எனும்போது ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கனுக்கே ஆசிரியர்கள் இல்லாத நிலை தற்போது பல கிராமப்புற பாடசாலைகளில் காணப்படுகின்றது.

கிராமப்புறங்களில் மக்கள் சற்றுப் பின்தங்கிய நிலையில் காணப்படினும் அங்கும் கல்வியில் ஆர்வம் மிக்க மாணவர் சமுதாயம் காணப்படுகின்றது. அவர்களுக்கான கல்வி சரியான முறையில் வழங்கப்படாமையினால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. அதாவது ஆசிரியர் பற்றாக்குறை, பிரத்தியோக வகுப்புக்கள் இல்லாமை, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சிறந்த முறையில் அமையாமை மற்றும் குறித்த காலப்பகுதிக்குள் பாடத்திட்டம் கற்பிக்கப்படாமை போன்ற பல்வேறு காரணங்களே மாணவர்களின் கல்வி பாதிப்படைய காரணமாக அமைகிறது. அத்தோடு வறுமை, குடும்ப சூழ்நிலை, கல்வி பற்றிய அறிவு போதாமை ஆகியவற்றால் இடைவிலகல்களும் ஏற்படுகின்றன. இவை அதிகம் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களிலே காணக்கூடியதாக உள்ளது.

எனினும் கல்வி அமைச்சுகளினால் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. பாடசாலைகளில் கட்டிட வசதிகள், ஆய்வு கூடங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் என்பன அமைத்துக் கொடுக்கப்படுவதுடன் ஆசிரியர் பற்றாக்குறையும் சிறிது சிறிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. மற்றும் மாணவர்கள் கணினி அறிவைப்பெற கணணிகள் அதற்கான நிதியுதவிகள் செய்து கொடுக்கப்படுவதுடன் குறித்த காலப்பகுதியில் பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை உரிய முறையில் நடைபெற்று வருகின்றன். இதனால் கிராமத்தில் உள்ள மாணவர்களின் கல்விநிலை உயர்வடைகின்றது.

முன்பு உயர்தர கல்வி நடவடிக்கைகளுக்காக நகரத்திற்குச் சென்று கவ்வி கற்கின்ற நிலை காணப்பட்டது. இந்நிலை தற்போது படிப்படியாக குறைந்துவருகின்றது. காரணம் கிராமங்களிலே உள்ள பாடசாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதனாலாகும். நகர்ப்புறங்களில் கல்வி செயற்பாடுகளை நோக்கும் போது சிறப்பான கல்விநிலை காணப்படுகின்றது. எனினும் தரம் 05, க.பொ.த சாதாரண தரம் மற்றும்; உயர்தர கற்கும் மாணவர்கள் ஓய்வற்ற கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவை மாணவர்களின் அறிவை வளர்க்கும் எனினும் சில உளவியல் ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தலாம்.

நகர்ப்புறங்களில் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை விட தனியார், பிரத்தியேக கற்றல் செயற்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன. பாடசாலையில் கற்றல் சிறப்பாக அமையாது போகும் போது மாணவர்கள் தனியார், பிரத்தியோக வகுப்புக்களை நாடுகின்றனர். இவ்வாறான தனியார் பிரத்தியோக வகுப்புக்கள் மாணவர்களின் அறிவை வளர்க்கின்றது. இவை பெரும்பாலும் கணித, விஞ்ஞான பாடப்பிரிவுகளுக்கு அவசியம் எனினும் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்கள் இவ்வாறான பிரத்தியேக வகுப்புக்களில் கற்றிருப்பர் என்ற எண்ணத்தில் மேலோட்டமாக கற்பிக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. மற்றும் குறித்த நேரத்திற்குள் பாடத்தை கற்பித்து முடிப்பதையே கருத்திற் கொள்கின்றனர். அவை எந்தளவு தூரம் மாணவர்களைச் சென்றடைந்துள்ளது என்பதை கவனத்திற் கொள்வதில்லை.

எவ்வாறாக இருப்பினும் தற்போது கிராம, நகர கல்வி நடவடிக்கைகள் சிறந்த முறையில் அமையப்பெற்று வருகின்றது. சிறந்த கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களும் காணப்படுகின்றனர். மாணவர்களுக்கு மேலதிக விளக்கங்களை அளிப்பதன் மூலமும் மாணவர்களோடு சிறந்த இடைத்தொடர்புகளை பேணுவதன் மூலமும்  அவர்கள் மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கின்றனர்.

மற்றும் கிராமத்திலும் நகரத்திலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் சிறந்த முறையில் அமைகின்றன. விளையாட்டுப் போட்டிகள், தமிழ்மொழி தினப் போட்டிகள், கணித விஞ்ஞானப் போட்டிகள், மன்றச் செயற்பாடுகள் என்பன இடம்பெறுவதோடு இதன் மூலம் மாணவர்களின் திறன்கள் வெளிக் கொணரப்படுகின்றன. இவ்வாறாக மாணவர்களின் கல்வி அறிவு விருத்தியாக்கப்பட்டு, திறமைகள் வெளிக்கொணரப்பட்டு மாணவர் சமுதாயம் வளர்க்கப்படுகின்றது.

ஆகவே கிராமம், நகர வேறுபாடின்றி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் போது வளம்மிக்க சந்ததிகள் தோற்றுவிக்கப்படும். அதற்கான ஊக்குவிப்புக்களை செயற்பாடுகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.


 நா.சசிதா
கல்வியியல் சிறப்பு கற்கை                                                                         
 2ம் வருடம்                                                                                                     
 கிழக்கு பல்கலைக்கழகம்