ஏறாவூர் இரட்டை படுகொலை வழக்கை புலனாய்வுத் துறைக்கு மாற்ற கோரிக்கை

ஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கை புலனாய்வுத் துறைக்கு மாற்றுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளின் படுகொலை வழக்கு  இன்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய மொஹமட் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் கணவரான ஐ.எம். மாஹிர், நீதிபதி முன் ஆஜராகி மேற்படி வேண்டுகோளை முன் வைத்துள்ளார். படுகொலை இடம்பெற்று ஒருவருடத்திற்கு மேலாகியுள்ள நிலையில் வழக்கு விசாரணைகளில் திருப்தி ஏற்படவில்லை என்று நீதிமன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி படுகொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் நால்வர் ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன்  வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.