கிழக்குப் பல்கலைக் கழகம் நடாத்திய “வரலாற்றுத் தினம்” விழாவில் கவிக்கோ வெல்லவூர்க் கோபாலுக்கு கௌரவிப்பு

(V.R.Moorthy)
கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சார்பில் துறைத் தலைவர் சி.க.சிவகணேசன் தலைமையில் புதிய கலையரங்கில் 14.11.2017 அன்று இடம்பெற்ற “வரலாற்றுத் தினம்” நிகழ்வில்; மட்டக்களப்புத் தேசத்தின் வரலாற்றினை ஆவணப்படுத்துவதில் முன்னின்று உழைத்துவருவதற்காக கவிக்கோ வெல்லவூர்க் கோபால் கௌரவிக்கப்பட்டார்.

விரிவுரையாளர் செல்வி நிலாந்தினி பொன்னுத்துரையின் வரவேற்புரையுடன் தொடங்கிய விழாவில் அறிமுகவுரையினை விரிவுரையாளர் செல்வி கௌரி புண்ணியமூர்த்தி நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் கவிக்கோ வெல்லவுர்க் கோபால் பேசுகையில் “கிழக்குப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை நவம்பர் 14ம் திகதியாகிய இன்றைய தினத்தை வரலாற்றுத்தினமாகப் பிரகடனப்படுத்தி எடுக்கின்ற விழாவானது கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவாக நிச்சயம் அமையும். வரலாற்றுத் துறையின் எதிர்காலத் திட்டங்களும் செயல்பாடுகளும் இங்கு விபரமாக எடுத்துரைக்கப்பட்டது. காலத்தின் தேவைகருதியதான இவையனைத்தும் நிறைவேறும்போது உண்மையில் எமது கிழக்கிலங்கை வரலாறு ஒரு முழுமைநிலைக்கு வந்துவிடும் என திடமாக நம்பலாம். அதற்கான சூழல் இப்போது கனிந்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது” எனக்குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் “வரலாற்றைப் படித்துவிட்டு நான் இத்துறைக்கு வந்தவனல்ல. ஒரு நீண்டகாலம் நான் கவிஞனாகவே அறியப்பட்டவன். புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்த காலமே வலிந்து இத்துறைக்குள் என்னை இழுத்துவந்தது. ஏற்கனவே ஓரளவு படித்துவைத்திருந்த மட்டக்களப்புத் தேசத்தினுடைய வரலாற்றுப் பதிவுகள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அன்றைய சேரநாடான கேரளத்திலும் கலிங்கமாகத் திழ்ந்த ஒரிசாவிலும் ஒப்பீட்டளவில் காணக்கிடைத்தபோது நமது வரலாற்றுப் பெருமைக்கான அடித்தளம் அங்கு நிலைகொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. அதன் பிரதிபலிப்பை எனது எழுத்துக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் அவற்றைக் கோடிட்டுக்காட்டின. ஆனாலும் நமது மண்ணின் வரலாறு ஒரு அறிமுக நிலையிலேயே இன்றுமுள்ளது என்பதை நாம் மறுதலிக்கமுடியாது. இதனை முழுமையாக்கவேண்டிய தொடர்பணி முறையாக வரலாறு படிக்கின்ற உங்களது கைகளிலேயே தங்கியுள்ளது என்பதனை நீங்கள் மறந்துவிடக்கூடாது.” என பல்கலைக்கழக சமூகத்தினரிடம் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

விழாவில் அதிதிகளாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் வைத்திய கலாநிதி கருணாகரன்,
பீடாதிபதி கலாநிதி மு.ரவி, யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆகியோர் தங்களது உரையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினர்.

இந் நிகழ்வின் போது சிரேஷ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களால் எழுதப்பட்டு சுவிற்சலாந்து தமிழ்க் கல்விச் சேவையினரால் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழர் சுருக்க வரலாறு மற்றும் ஈழத் தமிழர் மரபுரிமை அடையாளங்கள் ஆகிய இரு நூல்களின் அறிமுகமும் இடம்பெற்றது. நூல்களுக்கான அறிமுகவுரையினை பேராசிரியர் செ.யோகராசா அவர்களும் கலாநிதி அருட்தந்தை நவரெத்தினம் அவர்களும் வழங்கினர்