மட்டக்களப்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் துல்லியமான விவரங்களைப் பெற முயற்சித்து வருகின்றோம் - எஸ். அரியமலர்



மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் துல்லியமான விவரங்களைப் பெற தமது அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களின் நினைவுக் குழுவின் செயற்பாட்டாளர்  எஸ். அரியமலர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்றைய தினம் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவதுளூ

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் உட்பட 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் விளைவாக காணாமலாக்கப்பட்டோரின் 27வது வருட நிறைவும் கழிந்து விட்டது.

ஆயினும் காணாமல் போனவர்களில் தங்கி வாழ்ந்த உறவுகள் இன்னமும் நீதி கிடைக்காது ஏக்கப் பெருமூச்சுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பதும் இதுவரைத் தெரியவராத நிலையில் உறவினர்கள் வருடாந்தம் நினைவு நிகழ்வை மாத்திரம் அனுஷ்டித்து வருகின்றனர்.

1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின் போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில்  158 ஆண்கள்  அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல காணாமல்போதல்களும் பல படுகொலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

 மட்டக்களப்பின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களிலிருந்தும் யுத்தம் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் துல்லியமான விவரங்கள் இதுவரை ஆவணங்களாகத் திரட்டப்படாத நிலை இருந்து வருகின்றது.

இவற்றைத் திரட்டுவதற்கான முயற்சிகளில் மட்டக்களப்பு மாவட்ட காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களின் நினைவுக் குழு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதேவேளை, 1978ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை யுத்தத்தின் பெயரால் கடத்தல், படுகொலை, அச்சுறுத்தல்கள், அழிப்புகள், அத்துமீறல்கள் போன்ற பல சம்பவங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை பாதிக்கும் விதத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன.

இதனால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாகி, எதிர்காலமும் சூனியமாகி, நம்பிக்கையிழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது விடயமாக நாங்கள் பல தடவை மாறி மாறி வந்த அரசாங்கங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோதும் எவரும் எங்களுக்கு அது சார்ந்த தீர்வைப் பெற்றுத் தரவுமில்லை, கரிசனை எடுக்கவுமில்லை. இது எங்களுக்கு மேலும் அதிருப்தியையும் மன விரக்தியையும் அளித்துள்ளது.

ஆயினும், இப்பொழுதிருக்கும் மன விரக்திக்கும் துயரத்திற்கும் மத்தியில்;, மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் துல்லியமான விவரங்களைத் திரட்டி,  தற்போதைய நல்லாட்சியின் தலைமைத்துவங்களிடம் இந்த விடயத்தை முன்வைத்து அவர்களது கரிசனையை ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.