பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவியளிக்கும் பொதுமக்களுக்கும் சமூகப் பங்குதாரர்களுக்குமான அறிவித்தல்

(பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளுக்கு உதவியளிக்கும் பொதுமக்கள் தொடர்பில் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை)


பின்வரும் அறிவித்தலானது அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய சமூக அங்கத்தவர்களுக்காக விடுக்கப்படுகின்றது.
கல்விச் சுற்றறிக்கை இல 07/2013 மற்றும் பாடசாலைத் திட்டமிடல் வழிகாட்டிக் கைந்நூல் ஆகிய இலங்கைக் கல்வி அமைச்சின் ஆவணங்கள் மீதும் அவற்றுடன் தொடர்புபட்டதாக வெளியிடப்பட்டுள்ள மாகாண மட்ட அறிவுறுத்தல்கள், மாகாண கல்வித் திணைக்களத்தின் பாடசாலைச் சுயமதிப்பீடு, திட்டமிடல், திட்ட அமுலாக்கல், முன்னேற்றக் கண்காணிப்புச் செயற்பாடுகள் பற்றிய வழிகாட்டி ஆகியவற்றின் மீது கவனம் அனைவரது கவனமும் ஈர்க்கப்படுகின்றது.
பங்குதாரர்களிடையே ஏற்படும் முரண்பாடுகள், ஒரே செயற்பாட்டை ஒரே இடத்தில் பலர் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் வீண்விரயங்கள், முறையாகத் திட்டமிடாமல் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திட்டங்களைச் செயற்படுத்த முற்படுவதால் ஏற்படும் அநாவசிய முரண்பாடுகள் போன்ற பல தீமை பயக்கும் சந்தர்ப்பங்களை தவிர்ப்பதும் மகிழ்ச்சிகரமான சமூக உறவை பாடசாலைகளில் வலுப்படுத்துவதும் இவ்வறிவித்தலின் நோக்கமாகும்.
எனவே 01.01.2018 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாடசாலைகளுடன் தொடர்புபட்ட வேலைத் திட்டங்களைத் தயாரிக்கும் தனிநபர்களும் அமைப்புக்களும் இப்பொழுதே வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் குறித்த பாடசாலை அதிபர்களையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 2018க்குரிய SDP தயாரிக்கும் வேலைகள் தற்போது நடைபெறுகின்றன.
SDP, AIP  ஆகியவற்றில் உள்ளடக்கப்படாத திட்டங்களுக்கும் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்களுக்கும் எதிர்காலத்தில் அனுமதியளிக்கப்பட மாட்டாதென்பதுடன் இதற்கு ஒத்துழைப்பதன் மூலம் கணக்காய்வுப் பிரச்சனைகள், நிதிசார் ஐயங்களிலிருந்து விடுபட்ட பாடசாலைச் சமூக கலாசரத்தை உருவாக்க முடியும்.
அரச திணைக்களங்களும் இவ்விடயத்தில் கவனஞ் செலுத்துதல் விரும்பத் தக்கது.
கல்குடா கல்வி வலயத்தின் மனித வள அபிவிருத்தி மற்றும் பௌதிக வள அபிவிருத்திச் செயற்பாடுகளில் நெடுங்காலமாக ஒத்துழைப்பு வழங்கிவரும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

தி.ரவி
வலயக் கல்விப் பணிப்பாளர்
கல்குடா கல்வி வலயம்