ஆசிரியர் வாண்மை விருத்தியில் கணணி அறிவின் அவசியம்

கல்வி முறைமையின் பல்வேறு இலக்குகளையும் பாடசாலை என்னும் நிறுவனத்தினூடாக நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. கல்வியில் நவீன சிந்தனைகளும், நுட்பங்களும் அறிமுகப் படுத்தப்படும் போது அதை செயற்படுத்துவதில் பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பினை ஆசிரியர்கள் ஏற்க வேண்டியுள்ளது.

இந்த வகையில் 21ம் நூற்றாண்டில் மாறிவரும் உலகின் உலகமயமாக்கம், சர்வதேச தேவைகள், வேலை உலகின் எதிர்பார்ப்பு என்பவற்றுக்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்து நிற்கின்றது. ஆசிரியர்கள் பல்வேறு அறிவு, திறன் பெற்றவர்களாகவும் அதை உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டியவர்களாகவும் எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆசிரியர்களின் அறிவு, திறன் மேலும் விரிவாக்கப்பட்டதாகவும் புதிய பரிமாணத்தைக் கொண்டதாகவும் மாற்றம் பெறவேண்டிய தேவை உள்ளது.

இன்றைய கல்வி நோக்கு, கல்வித்திட்டமிடல், கல்வித் தேவைகளுக்கு ஏற்றவாறு கற்பித்தல் முறைமைகள், கற்பித்தல் தொழிநுட்பம் என்பவற்றில் புதிய பரிமாணத்தை உட்புகுத்த வேண்டிய அவசியம் ஆசிரியர்கள் முன் உள்ள பாரிய சவாலாகும். இந்த வகையில் உலகப் போக்கை வெற்றி கொள்வதற்காக இலங்கை அரசு தனது கல்விச் சீர்திருத்தங்களில் தகவல் தொழிநுட்பத்தையும் உட்சேர்த்து திட்டங்களை வகுத்து வருகின்றது.

இதற்கு அமைய ஆசிரியர்கள் கணினிசார் வாண்மை விருத்திவயை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளனர். அதாவது ஆசிரியர்களின் கணினி சார்ந்த அறிவு விருத்தியானது அவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கும்.
இலங்கைப் பாடசாலைகளில் கணினியை எவ்வாறு கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் நிலைக்கல்வி நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் 2000 பாடசாலைகளுக்கு கற்றல் வள நிலையங்களும் ஒவ்வொரு வள நிலையங்களும் கணினி வசதிகளும், 11 கல்வியற் கல்லூரிகளுக்கு இணைய வசதிகளும் செய்யப்பட்டு ஆசிரியர் திறன் விருத்தி செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இருந்த போதும் மரபுசார் முறைகளில் பின்னிப் பிணைந்து விட்ட எமது ஆசிரியர் சமூகத்தில் உள்ள பலர் இப் புதிய செல்நெறிகளை உள்வாங்குவதில் பின்னிற்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று அவர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்ட போது கணினி கற்பித்தல் விடயத்தில் தாக்கம் செலுத்தாமை, கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பின்மை, பாடசாலை கற்பித்தல் முறைமையில் கணினித் தொழிநுட்பத்தின் செல்வாக்கின்மை, இத்துறைக்கான ஊக்குவிப்பின்மை, பாடசாலைகளின் போதியளவு வளம் இன்மை, இதற்கான செலவினங்களை, ஈடுசெய்ய முடியாமை என இன்னும் பல வலுவான காரணங்களை முன்வைக்கலாம். இவ்வாறு பாடசாலை மட்டத்தில் கணினியைக் கற்பித்தல் உபகரணமாகப் பிரயோகிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள உள்ளது; என்பது உண்மை. இருந்த போதிலும் இன்றைய உலகப் போக்கின் வேகத்தை வெல்வதற்கு ஆசிரியர்கள் தம்மை தயார்படுத்த வேண்டிய தேவை முதன்மைப்பட்டு நிற்கின்றது.

நமது இலங்கைத்திருநாட்டின் எழுத்தறிவு வீதம் 96% ஆகும். இவர்களுள் கணினி அறிவுடையோர் 40% மாக (மத்திய வங்கி ஆண்டறிக்கை 2013) இருந்த போதிலும் இன்றைய நவீன உலகிற்கு ஏற்ற ஊழியர் படையணியை உருவாக்க வேண்டிய பாரிய சவால் பாடசாலைகளைச் சார்ந்துள்ளது. இப்பாரிய சவாலை எதிர்கொள்ள உற்பத்தியாளர்களாகத் தொழிற்படும் ஆசிரியர்கள் தமது வாண்மை விருத்தியில் ஊன்றிப் புலன் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று துரிதமாக இடம்பெற்றுவரும் தகவல் புரட்சியும், அறிவுப் புரட்சியும் அனைவரது வீட்டு வாசலுக்குமே வந்து விட்டன.இப்புரட்சியின் பங்காளர்களாகவும் பயனாளிகளாகவும் தங்களை ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்புரட்சியின் அடித்தளமாக அமைந்திருப்பது கணினித் தொழிநுட்பமேயாகும்.
கணினி அறிவு என்பது கல்வி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல வாழ்வியல் முதலீடுமாகும்.இதற்கு அமைய ஆசிரியர்கள் தமது வாண்மை விருத்தியைப் புதிய கல்விச் செல்நெறிகளுக்கு ஏற்ப விருத்தி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் மரபு ரீதியாக பெற்று வந்த வகிபங்குகளையும் ஏற்று வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தொழில் தகைமையைப் பெற்றுக் கொள்ளுதல் இன்றியமையாததாகும்.

ஆசிரியர்கள் கற்பித்தலைத் திட்டமிடும் போது நவீன கற்பித்தல் தொழிநுட்பங்களை உட்புகுத்துதல் கற்றலில் விளைதிறனையும் வினைத்திறனையும் ஏற்படுத்தும் என்பது உண்மை.கற்றல் கற்பித்தலில் உள்ள தொழிநுட்ப பயன்பாடு  அதிகரித்து வருகின்ற நிலமைதான் கல்வியை கிராமம் நோக்கிய விரிவாக்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேற்படி கருத்திற்கமைய வினைத்திறன், விளைதிறன் மட்டுமன்றி கல்வி விரிவாக்கத்திற்கும் வளப் பகிர்விற்கும் இக் கணினிக் கல்வி அடிப்படையாக அமைந்துள்ளது.

எனவே வகுப்பறைக் கற்பித்தலின் போது ஆசிரியர்கள் கணினியைக் கொண்டு இன்றைய பரந்த உலகின் சூட்சுமங்களையும்,விளக்கங்களையும், உருவப்படங்களையும், காட்சிகளையும் இடங்களையும் கட்புலனும் செவிப்புலனும் இணையக் கற்பிக்கும் போது கற்பித்தலில் விளைதிறனை ஆசிரியர் இலகுவாக எய்துவர். தகவல் தொழிநுட்பங்களை விரிவாக்கி அதனை வினைதிறனுடன் பயன்படுத்துமிடத்து சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அத்தோடு ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும் இத்தொழிநுட்பம் உதவும் இவ்வாறான கற்பித்தல் தொழிநுட்ப மேம்படுத்தலுக்கு பணிமுன் பயிற்சியும் பணியிடையே தொடர் பயிற்சியும் தேவை. இவ்வாறு கணினிக் கல்வியை ஆசிரியர்கள் விருத்தி செய்வதன் மூலம் தமது வாண்மை சார் திறனை மேம்படுத்தவும் இன்றைய உலகில் முகிழ்கின்ற சவால்களை  எதிர்கொள்ளத்தக்க சமநிலை ஆளுமை உள்ள மாணவர்களை உருவாக்குவதற்கும் கணினி அறிவு உரம் சேர்க்கும் என்பது திண்ணம்.

ந.கோவேந்தன்
கல்வியியல் சிறப்புக்கற்கை
கிழக்குப்பல்கலைக்கழகம்