டெங்கு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு


(துறையூர் தாஸன்)

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினதும் மட்டு போதனா வைத்தியாசாலையினதும் ஏற்பாட்டில் டெங்கு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு, வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இப்ராலெப்பை தலைமையில், வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இன்று(13) இடம்பெற்றது.

இச்செயலமர்வில், பொது வைத்திய நிபுணர் க.அருள்மொழி, சிறு பிள்ளை வைத்திய நிபுணர் திருமதி சித்ரா வாமதேவன் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர்.


வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இப்ராலெப்பை தலைமையுரையில், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு  வரும் ஒவ்வொரு டெங்கு நோயாளர்களும் பூரண சுகமடைந்து, வைத்தியசாலைக்கு வந்தது போன்று முழுத் திருப்தியுடன் வீடு செல்வதுடன் ஒவ்வொரு டெங்குக் காய்ச்சல் நோயாளர்களும் நேரடி கண்காணிப்பில்  தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வைத்தியசாலையின் ஒவ்வொரு விடுதியிலும் அமைந்திருக்கும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில்(HED) டெங்கு நோயாளர்கள், சிரேஷ்ட வைத்தியர்கள், விடுதி மருத்துவர்கள், தாதியர் ஆகியோரினால் கண்காணிக்கப்பட்டு நேரத்துக்கு நேரம்  முறையான சிகிச்சை இடம்பெறும் நிலை மாவட்ட, ஆதார, பொது வைத்தியசாலைகளிலும் முறையாக இடம்பெறவேண்டும்.மேலதிக சிகிச்சை தேவையேற்படும் போது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு  உடனடியாக மாற்றவும் வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுள் மட்டு போதனா வைத்தியசாலை டெங்குகாய்ச்சல் சிகிச்சை முகாமைத்துவத்தில், சிறந்த வைத்தியசாலையாக செயற்படுவதுடன் முன்மாதிரியாகவும் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமதி டாக்டர் கிறேஸி நவரெத்னராஜா,டாக்டர் தர்ஸினி,டாக்டர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சனி உள்ளிட்ட போதனா வைத்தியாசாலையின் சிரேஸ்ட வைத்தியர்கள், மருத்துவர்கள், தாதிய சகோதரிகள், தாதியர்கள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.