இலக்கியம் தெரியாத அரசியல்வாதிகளால் சமுதாயத்துக்கு எந்த பயனும் இருக்காது! - உலமா கட்சி தலைவர்


தர்மேந்திரா

இலக்கியவாதிகள் சமுதாய நோக்கு உடையவர்கள், எனவே அவர்கள் அரசியலுக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர் என்று உலமா கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜித் தெரிவித்தார்.

பரீட்சன் எழுதிய முரண்பாட்டு சமன்பாடுகள் என்கிற கவிதை நூல் வெளியீட்டு அறிமுகமும், இந்நூல் மீதான வாசிப்பு அனுபவ பகிர்வும் அகர ஆயுதம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாருக்கின் தலைமையில் நிந்தவூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்றபோது இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

 நூல் வெளியீட்டு விழாக்கள் கொழும்பில் பெரிய பெரிய ஆடம்பர ஹோட்டல்களில் நடத்தப்படுகின்றன. இதனால் புத்தகத்தை அச்சேற்றுகின்ற செலவை விட வெளியீட்டு விழாக்களுக்கான இட ஏற்பாட்டு செலவு பல பல மடங்குகள் அதிகமானதாக உள்ளது.

மேலும் இவ்வாறான ஆடம்பர வெளியீட்டு விழாக்களுக்கு அரசியல்வாதிகள் பேராளர்களாக அழைக்கப்படுகின்ற வழக்கமும் பெருமைக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இவ்வாறு அழைக்கப்படுகின்ற அரசியல்வாதிகளுக்கும், இலக்கியத்துக்கும் அறவே சம்பந்தம் இருப்பதில்லை. அத்தோடு நூல் வெளியீட்டு விழாக்களில் நடந்து கொள்கின்ற விதம் குறித்தும் அவர்களுக்கு தெரிந்து இருப்பதில்லை.

இலக்கியவாதிகள் சமுதாய நோக்கு உடையவர்கள். சமுதாய நோக்கு உடையவர்களால்தான் சிறந்த அரசியல்வாதிகளாக மிளிர முடியும். ஆகவேதான் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் போன்றோரால் சிறந்த அரசியல்வாதிகளாக மிளிர முடிந்தது. மறுபக்கத்தில் இலக்கியம் தெரியாத அரசியல்வாதிகளிடம் சமுதாய நோக்கை காண முடியாது இருக்கின்றது. இலக்கியம் தெரியாதவர்களை அரசியல் தலைவர்கள் ஆக்கியதன் தவறையே இன்று சமுதாயம் அனுபவித்து வருகின்றது. இலக்கியவாதிகள் சமுதாய நோக்கு உடையவர்களாக இருப்பதால் அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டியவர்களாக உள்ளனர்.

பரீட்சன் எழுதிய முரண்பாட்டு சமன்பாடுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா ஆரவாரம் எதுவும் இல்லாமல், அமைதியான முறையில், மிக எளிமையாக, உண்மையான இலக்கிய ஆர்வலர்களின் முன்னிலையில் இடம்பெறுவது மன நிறைவை தருகின்றது.
நூலாசிரியர் பரீட்சன் பதிலுரை ஆற்றியபோது தெரிவித்தவை வருமாறு:-
எனது கொப்பளிப்புகளையே கவிதைகளாக கிறுக்கி இருக்கின்றேன். அவை இயல்பானவை. மாறாக திட்டமிடப்பட்ட முறையில் புனையப்பட்டவை அல்ல. எந்தவொரு படைப்பாளியும் விமர்சனத்துக்கு பின்னால் செல்ல கூடாது என்பது எனது நிலைப்பாடு ஆகும். படைப்பாளி விமர்சனத்துக்கு பின்னால் செல்கின்றபோது படைப்பின் இயல்பு தன்மை கெட்டு போய் விடும் என்று  நான் விசுவாசிக்கின்றேன்.