சுனாமிக்கு பயந்து ஓடிய பெண்ணொருவர் தங்கச் சங்கிலியை திருடர்களிடம் பறி கொடுத்த சம்பவம்

செ.துஜியந்தன்

சுனாமிக்கு பயந்து வீதிக்கு ஓடிவந்த பெண்ணொருவர் தனது தங்கச் சங்கிலியை திருடர்களிடம் பறி கொடுத்த சம்பவம் பாண்டிருப்பில் நடந்துள்ளது. 

பாண்டிருப்பில் சுனாமி பீதியில் வீதியில் ஓடிவந்த பெண்ணொருவரின் தங்கமாலையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துக்கொண்டு ஓடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 
இன்று(15) கிழக்கின் கரையோரப் பிரதேசம் எங்கும் மக்கள் மத்தியில் மீண்டும் சுனாமி ஏற்படப்போகின்றது என்கிற அச்சம் எழுந்ததைத் தொடர்ந்து கரையோரப் பிரதேசத்து மக்கள் மத்தியில் பதற்றமும்,பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. 
கல்முனை பிரதேசத்தில் இப் பரபரப்பு மக்கள் மத்தியில் அதிகமாக தொற்றிக் கொண்டதை அடுத்து பாடசாலைகளை நோக்கி பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அழைத்துவர படையெடுக்கத் தொடங்கியிருந்தனர்.

இச் சூழ் நிலையை தமக்கு சாதகமாக திருடர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் வேண்டுமென்று வீதியில் சுனாமி வருது சுனாமி வருது என சத்தமிட்டவாறு வீதியில் ஒடியுள்ளனர். அதனை புதினம் பார்க்க வீதிக்கு ஓடிவந்தவர்களின் தங்கமாலையையே திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
பாண்டிருப்பு எல்லை வீதியில் கடற்கரைப் பக்கமாக ஓடிவந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் மாலையை மோட்டார்ச் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். சுனாமிக்கு பயந்து வீதிக்கு ஓடிவந்தவர் தனது தங்கச் சங்கிலியை திருடர்களிடம் பறிகொடுத்த இத் துயரச்சம்பவத்தால் அப் பெண் மிகவும் மனமுடைந்து போனார்.
கடந்த காலங்களிலும் மக்கள் மத்தியில் சுனாமிப் பீதியை கிளப்பிவிட்டு வீடுகளில் திருட்டுச்சம்பவத்தில் திருடர்கள் மேற்கொண்டிருந்தனர். பொது மக்கள் சுனாமி வதந்திகள் பற்றி தேவையில்லாது அச்சப்பட வேண்டாம் என பொலிஸார் கேட்டுள்ளனர்.