Tuesday, November 14, 2017

தமிழ் அரசியலின் தலைவிதி !

ads

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கு ஏதோவொரு ஆபத்து நேரப் போகின்றதென்று தமிழ் மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்ப அந்த ஆபத்து நேர்ந்தே விட்டது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பானது நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் இறுதியில் சிதைந்தே போய் விட்டது.

அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், வட கிழக்கு தமிழினத்தின் ஒட்டுமொத்த கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை களமிறங்கப் போவதில்லை. அது இப்போது முற்றாக உடைந்து விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த பிரதான கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் தன்னை இப்போது விலக்கிக் கொண்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமது கட்சியின் முடிவை நேற்றுமுன்தினம் பகிரங்கமாகவே அறிவித்து விட்டார். அதுமாத்திரமன்றி தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் புதிய தமிழ்க் கூட்டணியொன்று உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்கள் பேரவை, ஈ.பி.ஆர்.எல்.எப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற பிரதான அமைப்புகளையும், சிறிய குழுக்களையும் இணைத்துக் கொண்டு தேர்தலில் களமிறங்கப் போகின்றது புதிய தமிழ்க் கூட்டணி!

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள், பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையிலான குழுவினர் என்றெல்லாம் பலர் புதிய தமிழ்க் கூட்டணியுடன் அணிதிரளவிருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது உடைந்து விட்டதென்பதையும், எதிர்வரும் காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பு போட்டியிடப் போவதில்லையென்பதும் சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகி விட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள இன்றைய கதி புதுமையானதொன்றல்ல! உலகில் தமிழ் இனத்தின் ஒற்றுமையும், அந்த இனத்தின் அரசியலும் இவ்வாறான வரலாற்று ஒழுங்கில்தான் சென்று கொண்டிருக்கின்றன.

பண்டைக் கால தென்னிந்தியாவின் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி தமிழகத்திலும் இலங்கையிலும் இன்று வரை தமிழினத்தின் மாற்ற முடியாத தலைவிதி இவ்வாறுதான் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. உலகெங்கும் பரந்து வாழும் பல கோடி தமிழர்களாகட்டும்... இல்லையேல் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களாகட்டும்...

அரசியல் ரீதியாகவோ இல்லையேல் இன ரீதியாகவோ தமிழர்கள் என்றுமே ஓரணியில் நின்று இயங்கியதாக வரலாறு கிடையாது.

வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் அரசியலையும், தமிழ் தேசியத்துக்காகப் போராடிய இயக்கங்களுக்கு நேர்ந்த கதியையும் பார்க்கின்ற போது இதற்கான வேறு உதாரணங்கள் அவசியமில்லை.

பலகோடி தமிழர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவார்களாயின் அதைவிடப் பெரும் பலம் வேறில்லை என்பதை உலகே நன்கறியும். இந்தப் பலத்தைச் சிதறடிப்பதற்கான சூழ்ச்சிகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறான சூழ்ச்சிகளுக்குப் பலிக்கடாவாகிப் போவதுததான் தமிழினத்தின் மிகப் பெரும் பலவீனம்!

வடக்கு கிழக்கு தமிழ் அரசியலுக்கு இன்று ஏற்பட்டிருக்கின்ற கதியை பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலான மோதலின் விளைவென்று கூடக் கூறலாம்.

வெவ்வேறுபட்ட கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட இரு துருவங்கள் ஓரணியில் இயங்குவதென்பது சாத்தியமற்றதாகும். அதனால் உண்டான முரண்பாடுகளின் விளைவு இவ்வாறுதான் அமையும்.

தமிழ் அரசியல் இனிமேல் எவ்வாறான திசையை நோக்கிப் பயணிக்கப் போகின்றதென்பதை இப்போதைக்கு அறுதியிட்டுக் கூற முடியாதிருக்கின்றது. அதுவும் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் போன்றோரின் தலைமைத்துவத்தில் இயங்குகின்ற தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக அமையும் என்பதுதான் இங்கு முக்கியம்.

தமிழரசுக் கட்சி வேறேதுவும் தமிழ் அமைப்புகளை இணைத்தபடி 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற நாமத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் மாத்திரம் தனது செல்வாக்கை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தப் போகின்றதா? இல்லையேல் தமிழினத்தின் அரசியல் ஒற்றுமை கருதி இரு அணிகளும் விட்டுக்கொடுப்புடன் மீண்டும் ஒரு குடைக்குள் வந்து விடுமா?

இவ்வாறெல்லாம் தமிழ் மக்கள் பல்வேறு கோணங்களில் இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

இவ்விடத்தில் ஒன்றை மாத்திரம் தெளிவாகக் கூற வேண்டியிருக்கின்றது.

வடக்கு கிழக்கில் தோன்றிய தமிழ் இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள் ஓரளவு தணிவடைந்து போன நிலையில் தோற்றம் பெற்றதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தங்களுக்கிடையே முட்டிமோதிக் கொள்கின்ற போதிலும், அரசியல் ரீதியில் இவ்வாறான புரிந்துணர்வொன்று எவ்வாறு ஏற்பட்டதென்று உலகமே அவ்வேளையில் வியந்து நோக்கியது.

தொடர்ந்து வந்த தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈட்டிய அபார வெற்றிகளால் இலங்கைத் தமிழினமே தலைநிமிர்ந்து நின்றது. தமிழினத்தின் அரசியல் ஒற்றுமையை, ஏனைய இனங்கள் அச்சத்துடன் நோக்கின. தமிழினத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் மாபெரும் வல்லமை கொண்ட சேனையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நோக்கப்பட்டது.

அனைத்துமே இப்போது கலைந்து போன கனவாகி விட்டன. தமிழினத்தின் எதிர்கால அரசியல் இப்போது எதுவுமேயற்ற வெறும் சூனியமாகவே தென்படுகின்றது. 

தமிழ் அரசியலின் தலைவிதி ! Rating: 4.5 Diposkan Oleh: - Office -
 

Top