கூட்டமைப்பின் சார்பில் களுதாவளையில் இருவரின் பெயர்கள் முன்மொழிவு!

எதிர்வருகின்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு களுதாவளைக் கிராமத்திலுள்ள 2 வட்டாரங்களுக்கும் உரிய வேட்பாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு, கிராம மக்களுடன் சேர்ந்து தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் களுதாவளைக் கிளை தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் களுதாவளைக் கிளைக் கூட்டம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் அக்கிளையின் செயலாளர் கு.பாரத்தீபனின் வீட்டில் இடம்பெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்சியின் களுதாவளைக் கிளைத் தலைவர் ப.குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை உள்ளிட்ட கட்சியின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுதாவளை வடக்கு வட்டாரத்திற்கு வீடமைப்பு அதிகாரசபையிலிருந்து ஓய்வு பெற்ற உதவிப் பெறியியலாளரும், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளராகவும் இருந்த ப.குணசேகரமும், களுதாவளை தெற்கு வட்டாரத்திற்கு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் ஞா.வ.யோகநாதன் என்பவரையும் களமிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் ஜனவரி மாத இறுதிப் பகுதியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.