சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது! 03 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அனுமதியின்றி, அத்துமீறிக் குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 03 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
வியாழக்கிழமை  (30) சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வொன்றின் போது தொழில் நுட்பக் கல்லூரி மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு, அதிபர், நிருவாக சபையினர், பொலிசார் போன்றோரின் உதவியினால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது. பின்னர் இது விடயமாக வெளியிலுள்ள சிலர் அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அனுமதியின்றி, தொழில் நுட்பக் கல்லூரியிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து மாணவர்களுக்கிடையில் பெரும் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அதிபர் பொலிசாரைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.

 சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இபுனு ஹஸார் அவர்களின் விசேட பணிப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர்களான எம்.எஸ்.அப்துல் மஜீட், ஜானக்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று, அங்கு குழப்பம் விளைவித்ததாகக் கருதப்படும் 05 சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், அவர்கள் பாவித்த 03  மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.