கட்சித் தாவல்களால் அம்பாறை மாவட்ட அரசியல் சூடுபிடிப்பு



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட அரசியல் சூடுபிடித்து வருகின்றது.

இத்தேர்தலில் களமிறங்கும் வாய்ப்புகள் சிலருக்கு வழங்கப்படாத சந்தர்ப்பத்திலும் கட்சிகளின் தேர்தல் கூட்டு விடயங்களிலும் முரண்பாடு காரணமாக கட்சித் தாவல்கள் அதிகம் இடம்பெறக் கூடிய சாத்தியம் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தடவைகள் தெரிவாகியிருந்தார்.

ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும் தரப்புடன் நட்புப் பாராட்டத் தொடங்கிய அமீர், மாகாண சபையிலும், ஆளும் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதனையடுத்து, இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக, அதாஉல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாகாண சபையின் எதிரணி ஆசனத்துக்கு அமீர் மாறியதோடு, அதாஉல்லாவுடனான உறவைப் புதுப்பித்துக் கொண்டார்.

இவ்வாறு அரசியல் தடுமாற்றங்களுடன் இருந்து வந்த அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, அவரின் கட்சியில் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார்.

இதேவேளை, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபையின் தவிசாளரும் சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஸாதும் அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.