மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி.

(க.விஜயரெத்தினம்)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று(10.12.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த கண்டனப்பேரணியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ,மாகாண சபை உறுப்பினர்களோ, அரசியல்வாதியோ கலந்துகொள்ளவில்லை.கல்லடி பாலத்தருகில் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாலத்திலிருந்து புறப்பட்டு,பேரணியானது அரசடி ஊடாக நகரத்தை அடைந்து காந்திபூங்காவை அடைந்தது.இந்தப்பேரணியில் மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த  ஆயிரத்து மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டு கண்ணீருடன் தமது ஆதங்களை தெரிவித்தார்கள்.

இவர்கள் பாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டார்கள். இவர்கள் "ஓ.எம்.பீக்கு அதிகாரம் இல்லை", "சர்வதேசத்தில் எம்மையும் ஏமாற்றாதே", "மரணச்சான்றீதழ்கள் எமக்கு வேண்டாம்", "சிறைச்சாலையில் கைதிகளை துன்புறுத்துவதை நிறுத்து", "அரசாங்கமே அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீயே பொறுப்பு கூறவேண்டும்","குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாப்பது ஏன்...?","எமது உறவுகள் எமக்கு உயிருடன் வேண்டும்" என பதாதைகளை தாங்கியவாறு சென்றிருந்தார்கள்.