முன்பள்ளிகள் மாணவர்களை விரிந்த சிந்தனை உள்ளவர்களாக மாற்ற வேண்டும் முன்பள்ளிபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.அருந்ததி

[ ரவிப்ரியா  ]
நாம் மேற்கத்திய கலாசாரங்களை உள்வாங்குவதில் நாம் பெருமை கொள்கின்றோம். அனேகமாக அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகளில் மேற்கத்திய பாண்டு வாத்தியங்களையே பயன்படுத்துகின்றோம். இன்றைய நிகழ்வில் இந்தச் சின்னஞ்சிறார்கள்
அலாதியாக எமது கலாசார வாத்தியங்களைப் பயன்படுத்தி எம்மை வரவேற்றமையானது எம்மை உண்மையில் பரவசப்படுத்தியது. எனது 12 வருடகால உத்தியோகத்தில் இத்தகைய ஆத்ம திருப்தியளித்த நிகழ்வாக என் மனதில் பதிந்துள்ளது. அதற்காக இந்த பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களை நான் மனப்புர்வமாகப் பாராட்டுகின்றேன்.

மேற்கண்டவாறு எல்ஓஎச் நாகபுரம் பாலர் பாடசாலையில் எல்ஓஎச் பொதுமுகாமையாளர் திருமதி சகுந்தலாறஞ்சனி; தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு மற்றும் ஒளிவிழா நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய மண்முனை தென் எருவில் பிரதேச செயலகமுன்பள்ளிபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சி.அருந்ததி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

இங்கு நடைபெற்ற நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எமது கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் கலை கலாசாரங்களில் உன்னத நிலையை அடைவார்கள் என்பதை அவர்களின் கலைத் திறமைகள் மூலம் வெளிப்பட்டது. இவர்கள் உலகில் சிறந்த நடன கலைஞர்களாக பாடகர்களாக எமக்கும் எமது மொழிக்கும் கலை கலாசாரத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்தகைய பாணியில் பாலர் பாடசாலைகள் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்.

இவ்வாறு இந்தச் சிறுவர்கள் எமது கலை கலாசார பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பழக்கப்படும்போது, மேற்கத்திய கலாசாரங்களுக்கு அடிமையாகாதவர்களாக இருப்பார்கள். அதன் மூலம் சமூத்தின் நல்லொழுக்கம் உள்ள நற்பிரஜைகளாக ஜொலிப்பார்கள். எனவே நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதில் பாலர் பாடசாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே சிறுவர்களை நன்கு பாதுகாத்து பராமரித்து சமூகத்திற்கு ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கிருக்கின்றது. எனவே சிறவர் கருவுற்ற காலம் தொடக்கம் 18 வயதுவரை நாம் அவர்களை கவனமாகப் பராமரிக்க வேண்டும். 3வயதில் முன்பள்ளிகளுக்கு வருகை தருகின்றாhகள். அவர்கள் மாறுபட்ட சூழலில் பல்வேறு விதமான குண இயல்புகள் கொண்ட குழந்தைகளோடு பழகுகின்றார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்த கொண்ட பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுகின்றார்கள்.
இங்கு வருகை தரும்போது அவர்கள் குறுகிய மற்றும் விரிந்த சிந்தனை பெற்றவர்களாகவம் வருகின்றார்கள். அவர்கள் எல்லோரையும் விரிந்த சிந்தனை உள்ளவர்குளாக மாற்றுவதே முன்பள்ளிகளின் பொறுப்பாகும். அதற்கான களங்களே அவர்களுக்கு இங்கு வழங்கப்படுகின்றது.
இப்பருவத்திலேயே 90வீதமான மூளைக் கலங்கள் விருத்தியடைகின்றன. வருடம் ஒருமுறை நடைபெறும் இந் நிகழ்வுகளால் அவர்களிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்கள், திறமைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை பிள்ளைகளிடம் திணிப்பது தவறு. அவர்கள் சிறார்களின் திறமைகளை இனம் காண்பது குறைவு.

பிள்ளைகளை இனம் கண்டு அதை விருத்தி செய்வதன் முலம் அவர்களை எதிர்காலத்தில் பிரசித்தி பெற்றவர்களாக மாற்ற முடியும். பிள்ளைகளை அவதிப்பட்டு தண்டிக்க முயல்வதன் மூலம் விபரீதமான நிலமைகள் எழலாம் எனவே பிள்ளைகளை வளர்க்கும்போது சிறந்த வழிமறைகளைக் கையாள வேண்டும். இந்த பட்டமளிப்பு விழா அவர்களுள் சிறந்த உத்வேகத்தை ஏற்படுத்தும்.