சட்டவிரோதமாக வெட்டப்பட்டு ஏற்றிச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

(ஏ.எம் றிகாஸ்)

மட்டக்களப்பு- தொப்பிகல அரசாங்க காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்றிச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

சம்பவநேரம் தப்பியோடிய இரண்டு சாரதிகளும்  பின்னர்   பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக  கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார்.

பொதுமக்கள் மூலமாக பொலிசாருக்குக்கிடைத்த இரகசியத்தகவலையடுத்து ஈரளக்குளம் காட்டுப்பிரதேசத்தில் மறைந்திருந்த பொலிஸ் குழுவினர்    இச்சட்டவிரோத மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.

இந்த இரண்டு உழவு இயந்திரங்களிலும்    முப்பது மரக்குற்றிகள் காணப்பட்டதாகவும் இவைகள் ஓட்டமாவடி பகுதியிலுள்ள மரஆலையொன்றிற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

உழவு இயந்திரத்தின் சாரதிகள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இன்று புதன்கிழமை ஆஜர்செய்யப்படவுள்ளதாக    பொலிஸார் குறிப்பிட்டனர்.