மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் முன்பள்ளியின் வருடாந்த ஒன்றுகூடலும் பரிசளிப்பு விழாவும்

                                                                        ( V.R.Moorthy )
மட்டக்களப்பு சைனிங் ஸ்டார்ஸ் முன்பள்ளியின் வருடாந்த ஒன்றுகூடலும் பரிசளிப்பு விழாவும் நேற்று (9) அதன் அதிபர் திருமதி. அருந்ததி சுவர்ணராஜ் தலைமையில் வில்லியம் ஒல்ற் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்பள்ளி மணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இவ் விழாவின்; பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி திருமதி.வி.திருக்குமார் மற்றும் கௌரவ அதிதியாக பாஸ்ரர்.எஸ்.செம் அமுதன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விக்கான முகாமைத்துவ உதவியாளர் திரு.மலர்ச்செல்வன், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விக்கான வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.எம்.சோபனா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


பிரதம அதிதியான கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் குழந்தை மருத்துவ இயல் நிபுணருமான வைத்திய கலாநிதி திருமதி.வி.திருக்குமார் பேசுகையில் பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளின் வழிப்படுத்தலில் சிலை செதுக்கும் சிற்பி போன்று செயற்படாது பயிர் வளக்கும் விவசாயி போன்று செயற்படவேண்டும். அதாவது பெற்றோரும் ஆசிரியரும் தாங்கள் நினைப்பதைப் போன்று பிள்ளைகளை ஆக்கிவிட முயலக்கூடாது. விவசாயி பயிர் வளர்வதற்கான தேவைகளை நிறைவேற்றி விட்டால் பயிர் தானாக எவ்வாறு வளர்கிறதோ அவ்வாறுதான் பிள்ளைகளும் தமது ஆற்றலுக்கு ஏற்றவாறு உருவாக வேண்டும். பிள்ளைகளே சிற்பி போன்று தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்று பெற்றோரும் ஆசிரியர்களும் சிற்பியாக மாறி பிள்ளைகளுக்கு விரும்பத்தகாத சுமையையும் அளுத்தத்தையும் கொடுத்து வருகின்றனர் என்றார்.