பாலை வனத்தையும் பசுமைப்படுத்திய அதிபர் பிரபாகரனுக்கு குரு பிரதீபா பிரபா என்னும் கிரீடம் - ஒரு பார்வை

[ ரவிப்ரியா ]
கல்விப் புலத்தில் ஒரு அற்புதம். கிரிக்கற்றில் ஹட்ரிக் போல் மூன்றாவது தடவையாகவும், பிரதீபா விருதை தனதாக்கி அரிய சாதனையின்; நாயகனாக திகழும் பட்டிருப்பு கல்வி வலயத்தின்
கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் முதல்வர் கணபதிப்பிள்ளை பிரபாகரன் கல்விச் சமூகத்தால் கௌரவம் பெற்றார்.

பிரதி அதிபர் இ.அருணகிரிநாதன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழா பாடசாலையின் வரலாற்றுப் பதிவாக அமைகின்றது.
பாடுபட்டவனுக்கு கிடைத்த பரிசு இது.  காட்டை களணியாக்கியதுபோல், பாலை வனத்தில் றோஜா நட்டு வாசனை பரப்பியதுபோல், கருமமே கண்ணாயிருந்து காட்டிய அர்ப்பணிப்பை கல்விப் புலம் கருத்தொருமித்து உச்ச புள்ளி வழங்கி உறுதிப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. உச்சி குளிர, உள்ளம் பூரிக்க, உகந்ததொரு தெரிவு அவரின் திறனை முற்று முழுதாக ஆய்ந்து அறிந்து அங்கீகரித்துள்ளது.

மூன்றாவது தடவையுமா? என்று முட்டுக்கட்டை போட முடியாமல். முடிவைச் சொன்ன நேர்முகக் குழுவின் நேர்மையும் துல்லியமும் தூய்மையும் பாராட்டுக்குரியது. பட்டிருப்பு கல்வி வலயத்தில் 69 பாடசாலைகள். வலயத்தின கிழக்கில் 37 அதிபர்கள்.  மேற்கில் 32 அதிபர்கள். மேற்கில் ஒன்று கிழக்கில் ஒன்றென 2அதிபர்கள் மட்டுமே விருதுக்கு தேர்வு செய்யப்படடமையும் அவர்கள் தொடர்ச்சியாக முறையே மூன்றாவது தடவையதகவும், இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தெரிவு செய்யப்படடவர்களின் பங்களிப்பு எத்தகையதென்பதை பளிச்சென்று காட்டுகின்றது.

புண்பாட்டு பாடப் புத்கமாக தமிழ் புத்தெழுச்சி கொண்ட கிராமம்தான் பழுகாமம். தந்தை செல்வாவின் கொள்கைக்காக அவரால் உருவாக்கப்பட்ட கட்சியை வளர்த்தெடுக்கும் சவால்மிக்க பணியில் பிரபாகரனின் தந்தை கணபதிப்பிள்ளை 22 தடவை சிறை சென்று வந்தவர் என்பது அவர் குடும்பத்தின் கொள்கைப்பற்றை கோடிட்டுக்காட்டுகின்றது. அந்தக் குடும்பத்தின் வித்தான பிரபாகரன் கொள்கைப் பற்றுடன் கல்வியில் பெரு விருட்சமாய் இன்று வளர்ந்திருப்பது ஒன்றும் அதிசயமல்ல.

இனப்பற்றும் மொழிப் பற்றும் அவரை இலக்கிய உலகிலும் கொடி கட்டிப் பறக்க வைத்தது. இலக்கியவாதிகள் சமூகத்தின் இலட்சியவாதிகள். இனத்தின் பெறுமதி கல்வியால்தான் கணிக்கப்படுகின்றது. அதை உயர்த்துவதற்கு சபதம் எடுத்து என்னால் முடியும் என்ற நெஞ்சுரத்துடன் இலக்கை எட்டிய பெருமைக்கரியவராக பிரபாகரன் திகழ்கின்றார். அதற்கு அவரது எளிமை தன்னடக்கம், பணிவு, விட்டுக்கொடுப்பு, எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் பண்பு என அடுக்கிக் கொண்டே போகலாம்.

மாணவர்களின் பெற்றோருக்கு மரியாதை அளித்து, ஆசிரியர்களை குடும்ப அங்கத்தவர்களாக அனுசரித்து, கிராம அபிவிருத்தி, மற்றும் சமூக  அமைப்புக்களோடு கை கேர்த்து, உரிய இடம் அளித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை அப்படியே ஏற்று  அனைவரையும் ஏற்றத்தாழ்வின்றி உள்வாங்கிய கூட்டு முயற்சியால் அதிபருக்கு கிடைத்த விருது இது.

முற்றிய கதிர் வயலை முத்தமிடுவதுபோல்,  தொடரும் பட்டங்களால் மற்றவர்களைப் பணியும் அவரது பண்பும் பணிவும்தான் அவரின் வெற்றியின் இரகசியமாக இருக்கும். அவரது பாராட்டுவிழாவில் மொழித்துறை பேராசிரியா சே.யோகராசாவின் பார்வை பின்வருமாறு அமைகின்றது.

பலரும் பல்வேறு துறை சார்ந்தும் விருதுகளைப் பெறுகின்றனர். இதில் முக்கியத்துவம் பெறுவது இலக்கியம் சார்ந்த விருதுகளாகும். எனினும் கல்வி சார்ந்தும் கல்வித் துறைக்கான பங்களிப்புக்கள் சார்ந்தும் வழங்கப்படுகின்ற விருதுகளை எமது சமூகத்தினர் பெறுவது அரிதாகவே காணப்படுகின்றது. இவ் விருதுகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகளின் உன்னத நிலையினை வெளிப்படுத்துகின்ற ஒன்றாகும்.

அத்தகைய விருதை தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் பெற்றுக்கொண்ட இவ் வித்தியாலய அதிபர் இக் கிராமத்திற்கும்;, பாடசாலைக்கும் மாபெரும் கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அந்தவகையில் ஊர் கூடி ஒன்றிணைந்து விழா எடுத்தமை பாராட்டுக்குரியது. இவ் விழாவினை ஏற்பாடு செய்வதற்காக ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தின் ஆர்வமும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. வாழும்போதே வாழ்த்த வேண்டியதின் அவசியத்தை இது தெளிவ படுத்துகின்றது.

ஒருகால கட்டத்தில் இந்திரா காந்தியிடம் மகாத்மா காந்தி அவரது பெயரைக் கேட்டார். அவர் இந்தியா என்று பதிலளித்தார். அவர் இந்திரா என்பதற்குப் பதிலாக இந்தியா என்று பதிலளித்தார். அதற்றாக மகாத்மா காந்தி அவரைப் பாராட்டினார். இந்த பாராட்டு அவரை இந்திய பிரதமராக்கி அவரின் திறமையை உலகறியச் செய்தது. பாராட்டப்படுபவர்கள் சாதனை படைப்பார்கள் என்பது உண்மையாகும். எனவே பாராட்டப்படும் இப்பாடசாலையின் அதிபர் மேலும் பல சாதனைகளை செய்வதற்கு வழிவகுக்கும். அதற்கான முழு திறமையும் அவரிடம் காணப்படுகின்றது.

கற்றலின் மூலம் ஒருவர் சாதனை படைப்பார். அதாவது பல துறை சார்ந்தது தொடர்ச்சியானதுமான கற்றலில் ஈடுபடுகின்ற இப் பாடசாலையின் சாதனைக்குரிய அதிபர், பல பட்டங்கள் மூலம் தனது தகுதியை உயர்த்திக் .கொண்டிருப்பவர். இவர் பாடசாலையின் முதல்வராக இருப்பதோடு மட்டுமல்லாமல். மேற்கு கரை தாய்மார் பள்ளிகளின் தலைவராகவும், கிழக்குமாகாண தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து கொண்டு தனது பணிகளை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றார்;. எனவே இவரைப் பின்பற்றி ஏனையவர்களும் சாதனையாளர்களாகவும் மாற வேண்டும்.

கண்ணகிபுரம் அன்று பாலைவனம் என்று சொன்னவர்கள் மத்தியில் பாலைவனம் பசுமை பெறும். நாள் ஒன்று நமக்கு வரும் என்ற மறத் தமிழன் பிரபாவும் வந்திட்டான் இங்கு வந்தபின் சொன்னதையும் செய்து விட்டான். சொல்லாததையும் பிறர் மெச்சுமளவு நடத்திவிட்டான் என்று இந் நிகழ்ச்சியின்போது, வீறு நடைகொண்ட கவிதை வரிகளில் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டதிலிருந்தும், இப்பாடசாலையின் சூழல் பொருத்தப்பாடு, வினைத்தின் மிக்க வளப்பயன்பாடு, பெறுபேற்றுச் சாதனைகள் என்பனவும் இந் நிகழ்வில் நான் கலந்து கொண்டதால் நான் உணர்ந்து கொண்டேன். எனவே இப்பாடசாலையின் அதிபர்; முன்மாதிரியானவராக இருக்கின்றார். எனது மாணவன் இவர் என்ற சொல்வதில் எனக்கும் பெருமையாக இருக்கின்றது.

அதிபர் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் தனக்கிருக்கின்ற ஆழ்ந்த பற்றுதலை உணர்வுபூர்வுமாக வெளிப்படுத்தியதை நான் பார்திருக்கின்றேன். இவரின் நூல்களுக்கான நயவுரை, நூல்களுக்கான மதிப்புரை என்பனவும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. ஒரு நல்ல ஆளுமைமிக்க தலைவனாக பிரபாகரன்  பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு நேரடிச் சாட்சிகள், நேரடி தரிசனங்கள் நிறையவே இருக்கின்றது. இத்தகைய ஒருவருக்கு குரு பிரதீபா பிரபா விருது வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமானதாகும். இன்னும் பல விருதுகள் பிரபாகரனுக்கு கிடைக்கும். கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன் என்று குறிப்பிட்டார்.