ஆலையடிவேம்பில் சமுர்த்தி கெகுலு சிறுவர் கழகங்கள் மறுசீரமைப்பு



இவ்வருடத்துக்கான சமுர்த்தி சமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள கெகுலு சிறுவர் கழகங்களை மறுசீரமைத்து அக்கழகங்களுக்கான காகிதாதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (12) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவினால் தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த கெகுலு சிறுவர் கழகங்களின் அங்கத்தவர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன், அதிதிகளாகப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலப்பிரபா மற்றும் மகா சங்கப் பணிப்பாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் எதிர்வரும் 2018 ஆம் வருடத்தில் வினைத்திறனாக செயற்படும் வண்ணம் கெகுலு சிறுவர் கழகங்களை மறுசீரமைப்பது தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உரையாற்றியிருந்ததுடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் தலைமையில் சிறுவர் கழக அங்கத்தவர்கள் மீளத் தெரிவுசெய்யப்பட்டு, அக்கழகங்கள் சமுர்த்தித் திணைக்களத்தின் அமைப்பு வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படும் வண்ணம் ஆலோசனைகளும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் மறுசீரமைப்பட்ட குறித்த கெகுலு சிறுவர் கழகங்களின் நிருவாகச் செயற்பாடுகளின் பொருட்டு ஒருதொகுதி காகிதாதிகளைக் கொண்ட பொதிகள் ஒவ்வொரு கழகத் தலைவருக்கும் கையளிக்கப்பட்டன.