பட்டிருப்பு தொகுதியில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் ஒன்றாவது தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்

 ரவிப்ரியா

உள்ளுராட்சி சபைகள் தேர்தல் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளுக்கான பங்கீடுகள் குறித்து களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில்   நேற்று (11) பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான கிளைக் கூட்டம் பரபரப்பான சூழலில் நடைபெற்றது.

தேர்தலை பகிஸ்கரிப்பது, சுயேட்சைக் குழுவாக களத்தில் குதிப்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படடன. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பாதிக்க கூடிய விதமான நடவடிக்கைகள் எமது இனத்தைப் பாதிக்குமென்பதால் அத்தகைய நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதென்ற இணக்கப்பாட்டிற்கு கடுமையான வாக்குவாதங்களின் பின் வந்ததைத் தொடர்ந்து  ஏகமனதாக பின்வருமாறு முடிவெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பிரமுகர்களின் குறிப்பாக சிரேஸ்ட உபதலைவர், செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலின்றி  தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டதற்காக பட்டிருப்பு கிளையின் கவலையை தெரிவிப்பது.

பட்டிருப்பு தொகுதியில் உள்ள இரு பிரதேச சபைகளான களுவாஞ்சிக்குடி, போரதீவு ஆகியவற்றில் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கவேண்டும்.

மட்டக்களப்பு மேயர் பற்றி மறுபரிசீலனை செய்வது.

இதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிப்பது.

மேற்கண்டவாறு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்மானப் பிரதியை கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்திடம் செவ்வாயன்று கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

இக் கூட்டத்தில் தமிழரசக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா கலந்து கொள்ளவிலலை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   .  

இதேவேளை இப் பிரச்சனையை சமூகமாக பேசி தீர்ப்பதற்கு ரெலோ முக்கியஸ்தர்கள் முயன்று வருவதாகவும் தெரியவருகின்றது.