நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் 20 வீதம் கூட பயன்படுத்தப்படுவதில்லை


இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் 20 வீதம் கூட பயன்படுத்தப்படுவதில்லை என தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஒழுங்கு பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் இந்த மடிக்கணினிகளில் இருக்கின்ற போதிலும் தற்பொதும் அச்சுப்பிரதிகளையே பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.  குறித்த மடிக்கணினிகளின் கடவுச்சொல்லை மறந்து விடுவதால், கைவிரல் அடையாளத்தை கடவுச் சொல்லாக மாற்றித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கைவிரல் அடையாளத்தை கடவுச்சொல்லாக மாற்றிய பின்னரும் கூட மடிக்கணினியை நாடாளுமன்ற உறுப்பினர்கள பயன்படுத்துவதில்லை என தெரிவித்த தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, புதிய தொழிநுட்பத்துடன் இயைந்து போகச் செய்யும் வகையில் அச்சுப்பிரதி ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதம் வழங்காதிருக்க வேண்டுமெனவும், கூறியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மடிக்கணினிகள், சீன நாடாளுமன்றத்தின் திட்டமொன்றின் கீழ் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.