அம்பாறையில் வரட்சி தாண்டவமாடுகின்றது: 24ஆயிரம் கால்நடைகள் தண்ணீர் தீவனமின்றி இறக்கும் நிலை!

(காரைதீவு  நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தில் வரட்சி தாண்டவமாடுகின்றது. வேளாண்மைப்பயிர்கள்கருகி நாசமாகிவருகின்றன.

நீரின்றி வானம்பார்த்த பூமியாகவுள்ள   நயினாகாடு பாமடிக்காணி திருக்கோவில் போன்ற  காணிகளில் வேளாண்மை கருகியுள்ளன. சிலர் நப்பாசையில் நீர்வவுசர்கொண்டு நீர்பாய்ச்சியும் பலனளிக்கவில்லை.
 பல இடங்களில் வேளாண்மைச்செய்கை கைவிடப்பட்டள்ளன. இதனால் பலவிவசாயிகள் நஸ்ட்டமடைந்துள்ளனர். அத்தோடு நெல்லுற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.பயிர்பச்சைகள் அழிந்துவருகின்றன.

அதேவேளை வரட்சி காரணமாக வட்டமடுப்பிரதேசத்தில் உள்ள சுமார் 24ஆயிரம் கால்நடைகள் நீரின்றி தீவனமின்றி அலைந்துதிரிகின்றன. கால்நடைகள் பல இறக்கும் தறுவாயிலுள்ளன என்று ஆலையடிவேம்ப கால்நடை பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் சோ.புஸ்பராஜா அம்பாறை அரசாங்க அதிபர் துசித பி வணிகசேகரவிடம் எடுத்துரைத்தார்.

வட்டமடுப்பிரதேசம் முற்றாக கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரையாகும். இது அரச வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்பட்டது. நீதிமன்றத்தீர்ப்புக்கூட உள்ளது. எனவே எந்தக்காரணம்கொண்டும் விவசாயம் செய்யவோ சேனைப்பயிர்ச்செய்கை செய்யவோ அனுமதிக்கக்கூடாது. அந்நிலை வந்தால் கால்நடைகளுக்கு எவ்வித இடமும் இல்லாமல் காட்டுக்குள் அனுப்பவேண்டிநேரிடும். கால்நடையாளர்கள் வேறுவழியின்றி விசம்குடித்து இறக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்குத் தள்ளப்படுவர்.

வட்டமடு மேய்ச்சல் தரை என்பது அரச சொத்தாகும். இதில் யாரும் தலையிடமுடியாது. இது தொடர்பில் ஜனாதிபதியிடமும் அறிவித்துள்ளோம். நாட்டின் வளங்களைப்பாதுகாக்கவேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்குமுள்ளது என்றார்.
அரச அதிபரிடம் சகல ஆதாரங்களோடு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அவரது சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டு அதனை ஆராய்ந்து பார்ப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை காலையும் மாலையும் கடுங்குளிர் நிலவுகிறது. குளிர்தாங்கமுடியாது வயோதிபர்கள் குழந்தைகளுக்கு பலவித நோய்கள் பீடித்துவருகின்றன. மூச்சுவருத்தமுள்ளவர்கள் மிகவும் கஸ்ட்டபப்டுகிறார்கள். தினமும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு பெருந்தொகையானோர் சமுகமளிப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.