பாடசாலைகளினூடாக சமூகம் எதிர் பார்க்கும் வெளியீடுகள் நடைபெற வேண்டும் - சி.பேரின்பராஜா

(இ.சுதா)

பாடசாலையினூடாக மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் மாத்திரமல்லாது சமூகத்தினை நெறிப்படுத்தக் கூடிய ஒழுக்கம் சார் விழுமியக் கருத்துக்களும் போதிக்கப்படுகிறது.ஒரு கிராமத்தினுடைய மிகப் பெரிய தூண் பாடசாலை அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கட்டாய பொறுப்புப்பாகும்.

இவ்வாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே மத்திய கல்லூரியின் அதிபர் சி.பேரின்பராஜா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உதயபுரம் தமிழ் வித்தியாலயம் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் பெயர் போற்றக் கூடிய பாடசாலையாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறான பெருமை தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளில் மாத்திரமல்லாது இணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் தமது திறமையினை வெளிக்காட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருகின்றமைக்கு ஆசிரியர்கள் மாத்திமன்றி மாணவர்களின் பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்பும் காரணமாகும்.

தமது பிள்ளையினை பாடசாலையில் சேர்த்ததுடன் தமது பொறுப்பு முடிந்து விட்டது என சில பெற்றோர் நினைக்கின்றனர் இது தவறானது.மாறாக பொறுப்புக்களை முழுமனதோடு ஏற்று பாடசாலையினுள் உள்வாங்கும் செயற்பாட்டினை ஒவ்வொரு பெற்றோரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது. கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் நல்லாசான்களுடன் இணைந்த வகையில் தமது பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளுக்கு உரம் இடுகின்ற தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோரையும் சாரும்.

பாடசாலை செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும் அரசு இலவசக் கல்வியின் மூலமாக பல வகையான உதவிகளை வழங்கி வருகிறது.அவ்வாறான உதவிகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் நன்றிக் கடன் செலுத்துபவர்களாக மாற வேண்டும்.அரசு எதிர் பார்ப்பது கல்வியினூடாக .நாட்டில் நற் பிரஜைகளை உருவாக்குவதாகும்.இதனை முறையாக கைக் கொள்வது மாணவர்களைச் சார்ந்ததாகும். எனத் தெரிவித்தார்.