மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய உழவர் திருநாள் விழா - படங்கள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய உழவர் திருநாள் பொங்கல் விழா செவ்வாய்கிழமை 16ஆம்திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர்  ஆலயத்திலிருந்து  பாரம்பரிய கலாசார பவனியுடன் ஆரம்பமான இந் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்து பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் சூரிய பகவானுக்கு பூசை இடம்பெற்று உழவர் பாடலுடன் உரலில் நெல் குற்றி, 15 பொங்கல் பானை ஏற்றி பொங்கல் இடம்பெற்றது.



இதன்போது 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வருகைதந்திருந்த பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களால் பொங்கல் இடம்பெற்றதுடன் விசேட நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.

தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், வின்சென்ட் தேசிய பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.