மட்டக்களப்பில் அகால மரணங்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகால மரணங்கள் அதிகரித்திருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நடப்பாண்டின் முதலிரு வாரங்களில் இத்தகைய மரண எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக ஏறாவூர் நகர பிரதேசத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமேயே இவ்வாறு அகால மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பிரதேசத்தில் 24 மரணங்கள் சம்பவித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஜனவரி 6ஆம் திகதி ஒரே நாளில் மாத்திரம் 6 மரணங்களும் ஜனவரி 15 ஆம் திகதி 5 மரணங்களும் சம்பவித்துள்ளன.

இயற்கை மரணங்களுக்கு மாறாக கடலில் மூழ்கிய நிலையில் ஒரு சிறுவனும், காட்டு யானைகள் தாக்கியதில் மூன்று ஆண்களும், பாடசாலைச் சிறுமிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையிலும், வீதி விபத்தில் ஒருவரும் என இத்தகைய மரணங்கள் இடம்பெற்றுள்ளது. அதுதவிர டெங்கு நோய் தாக்கம் காரணமாகவும் மரணங்கள் சம்பவித்துள்ளன.

வழமைக்கு மாறாக இத்தகைய அகால மரணங்கள் குறிப்பிட்ட இரு வார காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க இயந்திரமய வாழ்க்கை முறையில் தற்கொலை செய்து கொள்ளும் விரக்தி நிலை வயது வித்தியாசமின்றி அதிகரித்திருப்பதாக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.