தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், இனி எவ்விதமான பகடிவதைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது

“தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், இனி எவ்விதமான பகடிவதைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டது” என, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

 2016/2017ஆம் கல்வியாண்டுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடத்துக்கு அனுமதிப் பெற்றுள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“சிரேஷ்ட மாணவர்களில் சிலர் கனிஷ்ட மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த முனைகின்றனர். அவ்விடயத்தில் கனிஷ்டமாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

“பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படுகின்ற பகடிவதையால் கல்வி சீரழிந்து செல்வதோடு, உயர் கல்விக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

“ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிடுகிறது. மக்களின் வரிப் பணத்தில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள், கல்வி என்ற இலக்கை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற 04 வருடத்துக்குப் பின்னர் சிறந்த ஒரு பட்டதாரியாக வெளியேற வேண்டும். அத்துடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்களுடைய ஒத்துழைப்பை வழங்குவதோடு, நாட்டின் இறைமையையும் பாதுகாக்க வேண்டும்.

“அரசாங்கம், எமது கல்விக்கு கூடுதலான பணத்தை செலவு செய்து வருகின்றது. அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி எமக்குத் தேவையான கல்வியைப் பெற வேண்டும்.

“நாட்டில், எந்தப் பல்ககைக்கழத்திலும் இல்லாத இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் மட்டுமே அமைந்துள்ளது. இது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

பட்டதாரியாக வெளியேறுகின்றவர்கள் சமூகத்தலைவர்களாக  மாற வேண்டும்” என்றார்