தமிழர் விடயத்தில் கண்மூடித்தனமாக செயற்படுவோரை ஓரங்கட்ட வேண்டும்: துரைராஜசிங்கம்

தமிழ் மக்களை மேலும் வேதனைக்கு உட்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக செயற்படுவோரை ஓரங்கட்ட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதனின் தேர்தல் அலுவலக திறப்பு விழாவும் பரப்புரை கூட்டமும் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யார் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விட்டுச்சென்றாலும் புதியவர்களை மக்கள் உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். யார் சென்றாலும் அவர்கள் கைவிடப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள்.

தமிழ் மக்களின் தொடர்ச்சியான ஆணையைப்பெற்றிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு. தற்போது நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாங்கள் கூறிக்கொண்டிருக்கும் விடுதலை என்னும் சொல்லுக்கான அடைவு புதிய அரசியலமைப்பு உருவாக்கமாகும்.

இந்த அரசியலமைப்பு ஆக்கத்திற்காக தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு தற்போதுதான் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பலப்படுத்தவேண்டியது எமது கடமையாகும்.

ஆனால், நடைமுறையில் இல்லாத ஒரு சொர்க்கத்தினை காண்பதற்காக எம்மைவிட்டு சென்றவர்கள், இப்போது இடைக்கால அறிக்கையின் மாயையை உடைத்தெறிதல் என்ற மகுடத்தோடு ஒரு செயற்பாட்டினை தொடங்கியுள்ளார்கள். இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன என்பதை நாங்கள் பார்க்கவேண்டும்.

ஆனால் அவ்வாறு எதுவும் செய்யாமல் தற்போது செயற்படும் நிலமையானது. மிகவும் துன்பகரமானது. இந்த நிலை தமிழ் மக்களை இன்னும் வேதனைக்குள் தள்ளும். இவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு செயற்படுபவர்களை ஓரங்கட்டுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.