ஆசிரியர் முகாமைத்துவம் பேணப்பட வேண்டும்


ஒரு பாடசாலையைப் பொருத்த வரையில் ஆசிரியர் என்பவர் மிகவும் முக்கியமானவர். இவ்வாறான ஆசிரியர்களை பாடசாலை மட்டத்தில் முகாமை செய்வது அவசியமாகும். ஆசிரியர் முகாமைத்துவம் என்பது பாடசாலையின் இலக்குகளை அடைவதற்குரியதாக கையாள்வதாகும். பாடசாலையில் ஆசிரியர்கள் வினைத்திறன் மிக்கவராகவும் விளைதிறன் மிக்கவராகவும் இருக்க வேண்டுமாயின் சிறந்த முகாமைத்துவத் திறன் கொண்ட முகாமையாளராக இருக்க வேண்டும்.

பாடசாலைகள் தெளிவானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கும். இக்குறிக்கோள் தேசிய ரீதியில் அரசினாலும் சமூகத்தினாலும் அங்கீகரிக்கப் பட்டவையாகும்.  இத்தகைய குறிக்கோள்களை அடைவதற்கு பாடசாலை என்ற ஒழுங்கமைப்பை அதன் முகாமையாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாடசாலை முகாமையாளர்களான ஆசிரியர்கள் பாடசாலையின் குறிக்கோள்களை அடைவதற்கு  ஏற்ற வகையில் பாடசாலைகளின் நிலைமைகளையும் கவிநிலையையும் மாற்றியமைக்க வேண்டும். தனியொரு அதிபரில் தங்கியிருத்தல் எதுவுமின்றி பாடசாலை நீடித்து வளரக்கூடிய வகையில் நிலைமைகளும் கவிநிலையும் ஒழுங்கமைக்கப்பட  வேண்டும்.

பாடசாலையில் பணியாற்றும் மானிட சக்தி என்பதை ஊக்குவிப்பதன் மூலமாக பாடசாலையை மிகப் பெரிய நிறுவனமாக வளர வைக்க முடியும். இத்தகைய மானிடச்சக்தியில் முதன்மையானவர்கள் இந்த ஆசிரியர்கள். பாடசாலை என்ற நிறுவனத்தின் உள்ளீடுகளில் முக்கியமானவராவர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமது தேர்ச்சிகளை சிறப்பாக முகாமை செய்வது பாடசாலையின் செயற்பாட்டிற்கு உதவுவதோடு தனித்தனியாக வாழ்தொழில் முன்னேறுவதற்கும் உதவுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆசிரியர்களும் தம்மை சுய முகாமைத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

இதற்காக, ஆசிரியர்கள் தமது பலம் , பலவீனங்களை மதிப்பீடு செய்தல், தனிப்பட்ட மற்றும் தொழில் வாண்மை சார் குறிக்கோள்களை நிர்னயித்தல் , வேலைக்கும் தனது சொந்த வாழ்வுக்கும் இடையில் சமநிலையைப் பேனுதல், புதிய கற்றலில் ஈடுபடுதல் - இதில் புதிய அல்லது திருத்தமான திறன்கள் , நடத்தைகள் , உளச்சார்புகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு தம்மை சுய முகாமைத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

ஓவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வுத் தொழில் விருத்தி பற்றிய அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது , ஒரு ஆசிரியர் தனது வாழ்நாளில் பெறக்கூடிய வேலை சார்ந்த தொடர்ச்சியான பதவிகளையும் அதனுடன் தொடர்பு பட்ட முன்னேற்றங்களையும் வாழ்வுத் தொழில் எனலாம். இதனுடன் வேலைகள் தொடர்பான  உளப்பாங்குகளையும் அனுபவங்களையும் குறிப்பிடலாம்.   ஆசிரியர்கள் முதலில் சாதாரண ஆசிரியர்களாக தொழிலைத் தொடங்கலாம். ஆனால் நீண்ட காலத்தில் புதிய அறிவு, உயர்ந்த கல்வி , புதிய பதவிகள் , அனுபவங்கள் என்பவற்றுக்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருத்தல் வேண்டும், வாய்ப்பு கிடைக்கும் போது அதனை உரிய வகையில் பயன்படுத்தி  உரிய பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும், இயன்றளவு ஆசிரியர், பரீட்சகர், மதிப்பீட்டாளர், சேவைக்கால ஆலோசகர், பகுதித் தலைவர் , பிரதி அதிபர், அதிபர், உயர்கல்விப் பணிப்பாளர், பணிப்பாளர், ஆணையாளர, மதியுரைஞர் என பல துறைகளில் தொழில் புரிவதற்கான நாட்டம் கொண்டிருக்க வேண்டும், இதற்காக உயர்ந்த படிப்புக்களைப் பெற வேண்டும். புதிய தொழில் அனுபவங்களையும் பெற வேண்டும், செயல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் அங்கத்துவம் பெற்று செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.

ஆசிரியரானவர் சிறிய தோல்விகளையும் மதிப்பீடு செய்து படிப்பினைகளை பெற வேண்டும் , மற்றவர்களின் மதிப்பீட்டை விட சுய மதிப்பீடு மிகவும் சரியானது என்பதை உணர வேண்டும். ஆசிரியர்களின் வாழ்வுத் தொழிலின் முன்னேற்றத்தை அளப்பதற்கான திட்டவட்டமான நியமங்கள் எதுவுமில்லை. ஒவ்வொருவரதும் குறிக்கோள்கள், விழுமியங்கள் , ஊக்குவிப்புக்கள் என்பவற்றைப் பொருத்ததாகும். இவர்களின் சுயதிருப்பியை வைத்து மதிப்பிடுவதும் அவசியமாகும். தொழில் , பதவிகள் , பதவிகளை மாற்றுதல் தொடர்பாக சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பதும் செயற்படுத்துவதற்கு ஏதுவாக துரிதமாக செயற்படுத்துவதும் அவசியமாகும். உரிய வயதில் உரிய பதவிகளையும் தகைமைகளையும் பொருத்திக் கொள்வதில் அதிக சிரத்தை எடுப்பது நல்லது.

தனிப்பட்ட ஆசிரியரின் வருமானம்,  சொத்து, குடும்ப அங்கத்தவர்கள், உதவிகள், இட மாறும் வாய்ப்புக்கள், குடும்ப அந்தஸ்த்து, தனிப்பட்ட குணவியல்புகள், தொழில் வாய்ப்புகள் உருவாகும் நிலைமைகள் போன்ற பல காரணிகளும் ஒரு ஆசிரியசின் வாழ்வுத் தொழில் முன்னேற்றத்தை பாதிக்கக் கூடியன என்பதை ஒரு ஆசிரியர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாடசாலையில் ஆசிரியர்களின் தொழிற்பாடுகள் பற்றி அதிபரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, அதிபர்கள் ஆசிரியர்களின் தகைமை, ஈடுபாடு அடிப்படையில் கற்பித்தலுக்கான பாடங்களை ஒதுக்கீடு செய்தல் ,  தேவையான ஆசிரியப் பயிற்சியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல், சேவைக்காலப் பயிற்சி,மீள் பயிற்சி என்பவற்றில் ஈடுபடுவதற்காக அறிவுறுத்தல், பாடங்களைத் திட்டமிடும் முறை,ஒழுங்கு பதிவு செய்தல் தொடர்பான ஆலோசனைகள் , அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை ;வழங்குதல், இணைக்கலைத்திட்ட செயற்பாட்டில் எவ்வாறு? யுhர?; எப்போது? பங்கேற்க வேண்டும் என்பதையும் அத்தகையோருக்கு எத்தகைய வசதிகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் வழங்கப்படும் என்பதையும் தெளிவாக அறிவுருறுத்தல் வேண்டும்.

மதிப்பீட்டுப் பரீட்சைகள் எத்தகைய முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதோடு இதற்கென ஆசிரியர்கள் எத்தகைய வசதிகளை பெறுவர் என்றும் அதிபர் தெரிவித்தல், பாடசாலையின் சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் எத்தகைய ஆசிரியர்கள் எவ்வகையில் உதவ வேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவான அறிவுருத்தல்கள் வழங்கப்படுதல் , பரிசளிப்பு, விளையாட்டுப் போட்டி, ஸ்தாபகர் தினம்,  பெற்றோர் ஆசிரியர் தினம் போன்ற சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி போதிய கால  அவகாசத்துடன் அறிவுறுத்தல்களை வழங்கள் போன்ற செயற்பாடுகளையும் அதிபர்  செய்ய வேண்டும்.

அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் தொழில் ரீதியாக முன்னேறுவதற்குரிய வாய்ப்புக்கள் பற்றி சுற்றுநிருபங்கள் , விளம்பரங்கள் , வெகுசன ஊடகத் தகவல்கள் என்பவற்றை சரியான நேரத்தில் முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்கல், இவை தொடர்பாக நேரடியாக கலந்துரையாடி ஆசிரியர்களுக்கு ஊக்கமும் ஆலோசனையும் வழங்குதல் என்பவற்றையும் அதிபர் ஆசிரியரின் முகாமைத்துவத்திற்கு செய்தல் வேண்டும்.

பாடசாலைகள் யுத்தம்,சுனாமி போன்ற இயற்கை அணர்த்தங்களால் சிதைந்து போயிருக்க வாய்ப்புண்டு. இத்தகைய நிலைமைகளில் பாடசாலைகளின் உட்கட்டமைப்பை நிர்மாணிப்பதில் ஆசிரியர்கள் பங்கேற்பது அவசியமாகிறது. இதனால் இவை தொடர்பாக நன்கு ஆலோசனை செய்து திட்டமிட்டு செயல்திட்டங்களில் இறங்குவதற்குரிய ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
எனவே ஒரு பாடசாலையின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடைந்து கொள்வதற்கு ஆசிரியரானவர் தன்னளவிலும் பிறராலும் முகாமைத்துவம் செய்யப் பட வேண்டும். 

இதற்காக நிதானமாக கல்வி, திறன், தொடர்புகள் என்பவற்றில் நம்பிக்கை கொண்டு தொழில் பற்றிய நீண்ட கால இலட்சியத்தை அடைதற்குரிய திட்டத்தை தன்னளவில் தயாரித்து புதிய திறன்களை விருத்தி செய்து கொள்ள வேண்டும். அத்துடன் உயர்கல்வி கற்ற வேண்டும் ,தயக்கமின்றி பொறுப்புக்களை ஏற்று சரியாக நிறைவேற்ற வேண்டும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், தோல்வியை அனுபவங்களாக்கி கற்றுக் கொள்ள வேண்டும், உடல் எள ஆரோக்கியத்தை பேணி வர வேண்டும் மற்றும் அதிபராலும் ஆசிரியர் முகாமைத்துவம் பேணப்பட வேண்டும் போன்ற செயற்பாடுகளை செய்து வரும் போது ஆசிரியருக்கும் அவர் கற்பிக்கின்ற பாடசாலைக்கும் முன்னேற்றம் ஏற்படும் என்பது உறுதி.

SH.SANJIYA
EDUCATION AND CHILD CARE
EASTERN UNIVERSITY
SRILANKA