மட்டக்களப்பில் மர்மமான முறையில் காட்டு யானை மரணம்!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட திக்கோடையில் மர்மமான முறையில் காட்டு யானை ஒன்று  வியாழக் கிழமை (18) இரவு மரணமடைந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள சுற்றுவட்டப் பெறுப்பாளர் ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.....

திக்கோடைப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாக 8 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன.

இதனை அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு விரட்டியுள்ளனர்.

இந்நிலையில் அதில் ஒரு யானை திடீரென விழுந்து மரணித்துள்ளது.உயிரிழந்த யானை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், யானை எவ்வாறு உயிரிழந்துள்ளது என்பது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அப்பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும், வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள சுற்றுவட்டப் பெறுப்பாளர் ஏ.ஏ. ஹலீம் மேலும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளன.

இப்பிரதேசத்தில் 10 இற்கு மேற்பட்டோர் காட்டு யானைகளின் தாக்கத்தினால் இறந்துள்ளார்கள், பல வீடுகளும், தென்னை, வாழை, நெல்வயல்கள், உள்ளிட்ட பல பயன் தரும் பயிரினங்களும் காட்டு யானைகளினால் அழிக்கப்பட்டு வருகின்றன.

மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ள போதிலும் இதுவரையில் யானைப் பாதுகாப்பு  மின்சார வேலிகள்  இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிராத நிலையில் இவ்வருடம் புதிதாக இப்பிரதேசத்திற்கு பதவியேற்ற பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் முயற்சியின் பலனாக தற்போது அப்பிரதேசத்தின் செல்வாபுரம் கிராமத்தின் எல்லையில் 4 கிலோ மீற்றர் யானைப்பாதுகாப்பு மின்சார வேலி அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.