மாணவரின் கற்றல் செயற்பாட்டில் அறநெறிப்பாடங்களின் முக்கியத்துவம்.




ஒரு மனிதனின் முன்னேற்றத்ற்கு காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப் பிணியை நீக்கி ஒளியைத் தருவது கல்வியாகும். ஒருவன் தன் உள்ளத்தில் சேர்க்கும் அரிய பொருள் கல்வி ஒன்றுதான்.அதை சேர்த்துவிட்டால், உலகிலுள்ள மற்ற பொருள்களெல்லாம் தானே கிட்டும். ஒருவன் கற்ற கல்வி இப்பிறவிக்கு மட்டுமன்றி ஏழு பிறவிக்கும் பயன்தரும் என்கிறது திருக்குறள். ஒரு மனிதன் வாழ்வில் அவனுக்குக் கண்ணாக இருப்பது கல்விதான். எனவேதான், ''பிச்சை எடுத்தாவது கற்பது நல்லது' என்கிறது நாலடியார்.

மாணவர்களின் திறன் வளர்த்தளில் பாடத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது. புரிந்து கொண்டு படிக்கும் கல்வி முறையும் புரிந்து கொண்டு படைப்புக்களை உருவாக்கும்  கல்வி முறையும் தற்காலத் தேவையாக உள்ளது. இதில் அறநூல்கள் சார்ந்த கற்கை பிரதான இடத்தினை வகிக்கின்றது எனலாம்.

அறநூல்களைப் பயிலுவதும் பாடமாக வைப்பதும் இன்று குறைந்துவிட்டது எனலாம். வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும், தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அறநூல்கள் ஆகும்.இவை பழைய அனுபவங்கயின் சாரங்கள். இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும் ஏனெனில் இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில்தான் ஒழுக்கவிழுமியப் பண்புகள் குறைந்து செல்வதனை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.

மாணவர் கற்கும் பாடங்கள் அறிவு சார்ந்து மாணவனின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.அறிவு நுட்பமுடையவனாக ஒவ்வொரு மாணவரும் உருவாக வேண்டுமெனில் சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக் கட்டுப்படுத்தல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அறடிநறிப் பாடங்களே தன்னம்பிக்கை, சுயமதிப்பு, சுய முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி போன்ற பண்புகளை மாணவர்களிடம் தரக்கூடியவை.

கற்றலின் பயன் மாற்றங்களை உருவாக்குதல், சமூக நீதி காத்தல், சூழலுக்கு நட்புடமையோடு நடத்தல், சகோதரத்துவம் பேணல்,சமுதாய மேன்மை, சகிப்புத் தன்மை, இணங்கிப் போதல், பண்பாடு சார்ந்த அறநெறிகளைக் கடைப்படித்தல் போன்றவற்றைத் தருவதாக இருக்க வேண்டும்.
அறநெறிக் கல்வி முறையின் தேவை காலத்தின் கட்டாயமாகும். மனித பண்பு ஈடேற்றத்தை கொடுக்கின்ற கல்வி முறை இதுவாகும். இளம் மனதில் விதைக்கப்படும் நல்வித்துதான் கனி கொடுக்கும் மரமாய் விளைந்து நல்ல தலைமுறையை இம்மண்ணுக்குப் பரிசளிக்கும். மாணவர்களிடம் நுண்ணறிவு, மிகச்சிறு வயதிலேயே வளரத் தொடங்குகிறது.

இலக்கியங்களில் அடிச்சுவடியாய் விளங்கும் அறநெறிக் கருத்துக்கள் மாணவர்களின் எண்ணங்களில் ஆளுமையினைச் செலுத்தி அவர்களைச் செதுக்குகிறது.

தற்போதைய பாடத்திட்டங்களில் உள்ள அறநெறிப் பாடங்கள் மனனம் செய்வதற்குரியனவாக மதிப்பெண் நோக்கிலான பாடமுறைகளாக உள்ளன. புரியாத ஆங்கிலப் பாடங்களைப் போல் இவையும் பொருள் புரியாமல் மனனம் செய்ய வைக்கப்படுகின்றன. இம்முறையை விடுத்து அயநெறிக்கருத்துள்ள பாடங்களை ஆணித்தரமாய் மனதில் படியும் படியாகச் சொல்லித்தர வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும்.

குழந்தைப் பருவத்திலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை அறநெறிப் பாடங்களின் இன்றியமையாமையை பாடத்திட்ட வல்லுநர்கள் உணர்ந்து அதற்கேற்ப பாடங்களை  வகுக்க வேண்டும். ஆத்திசூடியிலிருந்து அறநெறி நூல்களிருந்து, காப்பியங்களிருந்து தற்கால கவிதை வரையிலும் ஒரு மாணவனின் பொது வாழ்விலும் பின்னர் இல்லற வாழ்விலும் அவனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படும்படியான அறநெறிக்கருத்துக்கள் பின்பற்றக் கூடிய வகையிலான பாடத்திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றை அவனின் மனதில் நன்கு பதியுமாறு போதிக்கப்பட வேண்டும். மதிப்பெண் பெறுவதற்காகவும், தேர்வுக்காகவும், பட்டங்களுக்குமான தற்காலக் கல்விமுறை மாற்றம் காண வேண்டியது அவசியமாகும்.

வாழ்வியல் நெறிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து அதைக் கடைப்பிடிப்பதற்கேற்ற கல்விச் சூழல்தான் தற்காலத்தின் தேவையாகும்.
அறவாழ்கைக்கான பண்டைக்காலக் கல்விமுறை மீண்டும் பின்பற்றப்பட வேண்டும். பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கல்வியைக் கருதாமல் பல சவால்களையும் தடைகளையும் தாண்டி, இந்த சமுதாய நலனுக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெறக் கூடியவனாக ஒரு மாணவன் உருவாக்கப்பட வேண்டும். போட்டி போடும் திறன், வெற்றி தோல்விகளைச் சமமாகப் பாவிக்கும் திறன், சகிப்புத் தன்மை,துணி;ச்சல் போன்ற குணங்களை ஒவ்வொரு மாணவனும் பெறத் தக்க வகையில் அறநெறிக் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று,  ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும் என ரஸ்கின் எனும் அறிஞரும் ஒருவனிடம் ஏற்கனவே பொதிந்திருக்கும் முழுமை பெற்ற நிலையினை மலரச் செய்வது கல்வி என்றும் அன்பு, அறநெறி, பண்பு, பணிவு, ஒழுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களை வாழ வைக்குமானால் அதுவே சிறந்த கல்வி என விவேகானந்தரும் கூறியுள்ளனர்.

இன்றைய மாணவ சமுதாயத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகவும் தாழ்ந்து போயுள்ளது. இன்றைய கல்விமுறை வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளப் பயன்பட்டுள்ளதேயொழிய வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை உயர்த்திக் கொள்ள  உதவவில்லை.கல்வித் தேர்வு முறையையும்,வேலைவாய்ப்பையும் மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளதால் அதில் வெற்றி பெறும் மாணவர்கள் திறமைசாலிகள் என மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது.

அவர்கள் மட்டுமே மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் விளைவு எளிய மனிதர்களிடம் தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறிய சிக்கல்களையும் சமாளிக்கும் பக்குவத்தை இதனால் இவர்கள் இழந்து விடுகிறார்கள். திறமைசாலிகளும் எதிலாவது சறுக்கி விட்டால் உடனே மனமுடைந்து போகின்றார்கள். சவால்களைச் சமாளிக்கும் மனப்பக்குவம் இவர்களிடம் இருப்பதில்லை.

இந்நிலை நீடிக்கும்பொழுது வாழ்க்கையில் பெற்ற வெற்றியையும் வசதியையும் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தவறான பாதையைத் தேடிச் செல்பவர்கள் மிகுதயாகின்றனர்.இந்நிலை சமுதாயத்தில் தொடர்ந்து நிலவி ஊழலும் இலஞ்சமும் வெளிப்படையாகவே நடைபெறுகின்ற நிலைமை இன்று ஏற்பட்டு விட்டது.

இதற்கு காரணம் அறநெறி உணர்வு குன்றிப் போனதே ஆகும். நல்ல பாதையில் மனிதன் சென்றடைய நல்ல வழிகாட்டுதல் இன்றியமையாத தேவையாக உள்ளது. மானுட முன்னேற்றத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை நல்ல நெறியைக் காட்டுதலே ஆகும். இந்த நெறிகாட்டுதல் பணியினைச் செய்ய வேண்டியது கல்விக் கூடங்களேயாகும்.அறநெறி நூல்களிலுள்ள கருத்துக்களைப் பாடங்களின் வழி பயிற்றுவிக்கப்பட்டால் மட்டும் போதாது.

அவற்றை விரிவான நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.கல்வி என்பது மூளைக்குள் திணிக்கப்படும் ஒரு கருவி அல்ல.சிறந்த பண்புகளை உருவாக்குகின்ற மனவலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற பண்பை மேம்படுத்துகின்ற கல்வியே உண்மையான கல்வி ஆகும்.

இந்தக் கல்வியைக் கற்றுத் தரும் ஆசிரியரும் அறநெறிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.அவரே முன்மாதிரியாக விளங்க வேண்டும். கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படும் அறநெறிகள் வீட்டிலும் கடைப்படிக்க பெற்றோர்கள் வழிகாட்டுதலாய் இருக்க வேண்டும். வீட்டில் கடைப்பிடிக்கும் மாணவர்களின் பண்பு நலன்களைப் பெற்றோர் ஆசிரியருடன் கலந்துரையாடல் மூலம் தெரிவிக்கலாம்.

இதுபோன்ற ஆசிரியர் பெற்றோர் மாணவர் ஒருங்கிணைப்பு என்பது பல்கலைக்கழகம் வரை தொடர முடிந்தால் கற்றலில் சிறந்த மாற்றம் ஏற்படும்.கலந்துரையாடல், சொற்பொழிவு, நாடகம் போன்றவை மூலம் அறநெறிகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றிய கற்பித்தலை ஏற்படுத்தலாம்.

அறநெறி போதனைகளின் வழி ஆசிரியர்களும் மாணவர்களும் தன்னை அறிந்து கொள்வதற்கும் தம்மிடம் உள்ள கறைகளைநீக்கிக் கொள்வதற்கும் தற்சோதனை செய்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். இம் முறையால் மாணவர்களின் மனப்போக்கையும் அறிந்து அவர்களின் திறனுக்கேற்ப கற்றல், கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள உறுதனையாக இருக்கும்.

மேலும் மனித வாழ்விக்கான இலக்குகளைக் கல்வி வழியாகவே மாணவர் சமுதாயம் அறிய முடியும்.ஆசிரியர்களே அந்த இலக்குகளை அடையக் காரணமாக உள்ளனர். நோக்கமில்லாத பயணம் வழி தெரியாத காட்டிற்குள் அலைவதற்கு ஒப்பு அதுபோல இலக்கு இல்லாத கல்வி இருட்டறையில் வெளிச்சம் தேடுவது போன்றதே.

'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து.'
எனக் குறள் கூறுகின்றது.

அதாவது ஒரு தலைமுறை கல்வி கற்றால் அஃது ஏழு தலைமுறைக்கும் பலனைத் தரும் என்கிறது. இவ்வாறு ஏழு தலைமுறைக்கும் பலனைத் தரக்கூடிய கல்வி அறநெறி வழிப்பட்ட கல்வியாக இருப்பின் சமுதாயமும் பயன் பெறும்.

மனிதன் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் வாழ சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறான்.அதைத் தொடர்ந்து பழக்கிட கல்விச் சூழல் சிறப்பாகஅமைய வேண்டும்.இதனை அறநெறிக் கல்வியினூடாக மாணவர்கள் பெற முயற்சிக்க வேண்டும். அதனாலையே பாடசாலைகளில் சமயப் பாடத்தினூடாக அறக் கருத்துக்களை போதித்தல், பாடசாலையில் நற்சிந்தனைகளை மாணவர்களுக்கு கூறுதல்,அற நூல்கள் பற்றிய விளக்கத்தினை மாணவர்களுக்கு போதித்தல், நாயன்மார்கள், பெரியார்கள் போன்றவர்களின் நீதிக் கருத்துக்களை கற்பித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் எந்தத் துறையாக இருந்தாலும் அத்துறையின் அறநெறி வழிநடத்தல் போன்றவற்றைக் கடைபிடிக்கும் வகையில் மாணவர்களிடம் தனிமனித ஆளுமை, குடும்ப ஆளுமை,சமூக ஆளுமைக் கூறுகளை வளர்த்தெடுக்கும் வகையிலான கல்வியே சமூக மேன்மைக்கு வழிவகுக்கும். ஆறிவியல் பாடங்களிலும்; கூட விஞ்ஞானிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை இணைத்து பாடத்திட்டங்களை தயாரிக்கலாம்.

எனவே இத்தகைய அம்சங்கள் இன்றைய கல்வி மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டால் கோடிக்கணக்கில் கற்றவர்களைக் காண முடிவதைப் போல, நல்ல மனித வளங்களையும் காண முடியும்,எனவேதான் இன்று தனிமனிதனுக்கு அவசியமான விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பலம் பெற்றுள்ளது.


M.டயானி
கல்வித்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்