ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுத்த பின்னரே ஓய்வேன்: ஜனாதிபதி மைத்திரி

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கிய பின்னரே ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொஸ்கமவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நிகழ்ந்த தவறுகளை திருத்திக் கொள்வதற்கு தம்முடன் இணையுமாறு முன்னாள் ஆட்சியாளர்கள் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்தக் கோரிக்கையானது, காணாமல் போதல்களையும், ஆட்கொலைகளையும், ஊடகவியலாளர்கள் படுகொலைகளையும் மீண்டும் நிகழ்த்தக்கூடிய யுகத்தை நோக்கி நாட்டை திருப்பிச் செல்வதற்கு சமமானதல்லவா?

கடந்த ஆட்சியாளர்கள் சர்வதேச அரங்கில் செல்வாக்கை இழந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் சர்வதேச சமூகத்தில் இலங்கையை நிர்க்கதி நிலைக்குத் தள்ளும் வேலைத் திட்டத்தை நோக்கி திரும்பிச் செல்வதற்கு மக்கள் தயாராக இல்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் அரசியல் பேதமின்றி நாட்டை நேசிக்கும் சகல அரசியல்வாதிகளையும் ஒன்றிணைத்து ஊழல் எதிர்ப்பு தேசிய இயக்கத்தை ஆரம்பிப்போம். நாட்டை நேசிக்கும் அனைவரும் இதில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.