தமிழர் பிரச்சினையை ஜ.நா.வுக்கு கொண்டுசெல்லும் தேர்தலல்ல இது! வேட்புமனுப்பத்திரத்தை தயாரிக்கத்தெரியாதவர்கள் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதா

(காரைதீவு  நிருபர் சகா)

தமிழர் பிரச்சினையை ஜ.நா.வுக்கு கொண்டுசெல்லும் தேர்தலல்ல இது. தமிழர் பிரச்சினையை தீர்க்கும் தேர்தலுமல்ல இது. சரி அப்படிவைத்துகொண்டால் இவ்வளவு காலமும் இந்தக்கட்சி என்ன செய்தது?
 தமிழர்பிரச்சினையை  ஜ.நா.வுக்கு கொண்டு செல்லவில்லையா? சரி ஜ.நாவுக்குக் கொண்டுபோய் எதைச்சாதித்தது?
முள்ளிவாய்க்காலில் 40ஆயிரம் பேரைக் கொன்றுகுவிக்கும் வரை பார்த்திருந்துவிட்டு இன்று இக்குடும்பத்தேர்தலில் வந்து ஜ.நா. என்று புளுடா விடுகிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்?

 இவர்களின் கதைகளை உள்வாங்க இது ஆலையடிவேம்பு அல்ல. இது கல்விகற்ற வீரத்தமிழனின் விளைநிலமாம் காரைதீவு என்பதை மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு காரைதீவுப்பிரதேசசபைக்காக போட்டியிடும் 3ஆம் 4ஆம் 8ஆம் 9ஆம் பிரிவுகளை உள்ளடக்கிய 6ஆம் வட்டார சுயேச்சை அணியின் வேட்பாளர் நமசிவாயம் ஜெயகாந்தன் (15)  திங்கட்கிழமை கடற்கரைப்பகுதியில் இடம்பெற்ற  சிறுகூட்டத்தில்  கூறினார்.


அவரது வட்டார மீனவசமுகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவருடன் ஏனைய வேட்பாளர்களான ஆ.பூபாலரெத்தினம் வ.சத்தியமாறன் ஆகியோரும் சமுமனித்திருந்தனர்.

அவர்மேலும் கூறுகையில்:

வேட்புமனுப்பத்திரத்தை எவ்வாறு  தயாரிப்பது எவ்வாறு கையளிப்பது என்பதுகூடத்  தெரியாதவர்கள் தமிழர்களது பிரச்சினைகளை ஜ.நா.வுக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாம். இதனை கற்றறிந்தமண் காரைதீவார் நம்பணும். தனது தலைவர் செல்வத்தை ஜெனீவாவிற்கு அழைத்துச்சென்று வந்துவிட்டு நானும் ஜெனீவா போய்வந்தேன் என நாக்கிளியாம்புழு சொல்வதுபோன்று சொல்வதை நம்பி தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்.அந்தப்பருப்பு இங்கு வேகாது.


இது ஊரை அபிவிருத்தி செய்யும் தேர்தல்: குடும்பத்தேர்தல். இந்தத்தேர்தலில் ஜ.நா. வும் வடக்குகிழக்கு இணைப்பும் தமிழ்த்தேசியமும் பேசி கற்றறிந்த காரைதீவைக் குழப்பலாம் என்று பகற் கனவு காண்கிறார்கள்.  ஊரைக்குழப்பியவர்களின் மாயாஜாலம் இங்கு எடுபடாது.

மக்களுக்காகவே கட்சி தவிர கட்சிக்காக மக்களல்ல. மக்களின் அபிலாசைகளை உணர்வுகளை மதித்து நடக்கவேண்டியது கட்சிகளின் தார்மீகக்கடமையாகும். காரைதீவு மக்களின் ஆசை அபிலாசைகளை மதிக்காத கட்சிக்கு    எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிக்கவேண்டும்.நிச்சயம் 10ஆம் திகதி பாடம் புகட்டுவார்கள். அதன்பிறகு இப்பக்கமே அவர்கள் கால்வைக்கமாட்டார்கள். அப்போது தெரியும் காரைதீவான் யாரென்று.

நான் அரசியலுக்குப்புதியவன். கள்ளங்கபடமற்ற தூய அரசியலை முன்னெடுக்கவிரும்புகின்றேன். அதனால்தான் எமது சமுதாயத்தவரின் மீன் சின்னத்தில் வருகிறேன். எமது சமுதாயத்தை கண்ணியப்படுத்துவதற்காகவே எமது சுயேச்சை அணியினர் மீன் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆரம்பமே இப்படியென்றால் நானும் உறுப்பினரானால் எமது சமுதாயத்தை மேம்பாடடையப் பலபணிகளை என்னால் முன்னெடுக்கமுடியும்.

கடந்தகாலங்களில் எமது கடற்கரைப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் அராஜகங்களை அறிந்திருக்கின்றேன். அதனைக்கேட்பாரும் இல்லை. பார்ப்பாரும் இல்லை. இதுவரைகாலமும் வராதவர்கள் இன்று வலியவந்து தகரம் கொடுக்கிறார்கள். அரிசி கொடுக்கிறார்கள்.சாராயம் கொடுக்கிறார்கள்.ஏன் பணம்கூட வழங்குகின்றார்கள். கேட்டால் எமது கட்சி தூய்மையானது. பணம் இல்லை என்பார்கள். வேட்பாளர்களை இறுநாள்வரைக்கும் தேடி பணம்கொடுத்து சேர்த்ததை ஊரறியும் . சிந்தியுங்கள்.எதற்காக இப்போது வந்து பணம் தருகிறார்கள்? தகரம் தருகிறார்கள்? நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.

இரு இடங்களில் தூக்கிவீசப்பட்டதை நிவர்த்திசெய்ய காரைதீவில்கசகரணம்  போடுகிறார்கள். எந்தக்கரணமும் கற்றறிந்த காரைதீவில் சரிவராது.

இந்தத்தேசியக்கட்சியினர் இதுவரை காரைதீவில் செய்த அபிவிருத்தி என்ன? இவர்கள் எல்லாம் கறிவேப்பிலைகள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

நாம் இதுவரை வாக்களித்தவர்கள் எமது மீனவ சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள்? என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள். அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்பார்கள். இங்குவந்து கூட்டமும் வைப்பார்கள். இறுதியில் அடியும் உதையும் தான் மிச்சம். எம்மவர் இருவரின் வேலையைப்பறித்தார்கள். அந்த அநியாயத்தையெல்லாம்  நாம் இலகுவில் மறந்துவிடமுடியாது.

மீனவசமுதாயம் என்ன கேள்விபார்வையற்ற சமுகமா? வாக்களிப்பதற்கு மாத்திரம்தானா எமது சமுகம்? யாரோ எம்மவர் கொடுத்த நிதியில் இங்கு கிள்ளித்தெறித்துவிட்டு நாம் சேவை செய்தோம் என்று கொக்கரிப்பது எந்த வகையில் நியாயம்? இனியும் இதனை அனுமதிக்கமுடியாது.
எனவே மீனவர்களாகிய நாம் சிந்தித்து எமது வாக்குகளை காரைதீவின் ஒற்றுமைக்காக சுயேச்சைஅணிக்கு வழங்கவேண்டும். என்றார்.