ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலய அதிபரின் கால்கோள் விழாச் செய்தி

அன்பான பெற்றோர்களுக்கு வணக்கம்!

என் மீதும் ஆசிரியர்கள் மீதும் நம்பிக்கை வைத்து உங்கள் பிள்ளைச் செல்வங்களை உருவாக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துள்ளீர்கள். அதற்கு முதற்கண் எமது நன்றிகள். அத்துடன் உங்கள் நம்பிக்கையை முடிந்தவரை காப்பாற்றி உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலையால் வழங்கவேண்டியவற்றை உயர்வாக வழங்குவோம் என்பதை உறுதியளிக்கின்றோம். எனக்குத்தெரியும் உங்கள் கனவு, உங்கள் கற்பனை, உங்கள் இலட்சியங்கள் எல்லாமே உங்கள் பிள்ளைகளைப் பற்றியதுதான். இன்று உங்களது பிள்ளை தன வாழ்வின் புதிய அத்தியாமொன்றை ஆரம்பிக்கின்றது.

இதுவரை நாளும் உங்கள் நிழலில் உங்கள் உலகத்தினுள் வாழ்ந்த உங்கள் பிள்ளை புதியதோர் உலகத்தினுள் காலடி வைக்கின்றது. பாடசாலை எனும் சமூக நிறுவனத்தினுள் உங்கள் பிள்ளை உறுப்பினராகின்றது.

பாடசாலையின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட, விழுமியங்களை மதித்து நடக்க உங்கள் பிள்ளை பழக்கப்படப் போகின்றது. இவ்வாறே சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள பிள்ளை தன்னைத் தயார் படுத்தப்போகிறது. எதிர்கால நல வாழ்வுக்குத் தேவையான நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளப்போகின்றது.

இனிமேல் உங்கள் பிள்ளைகளின் நலனில், முன்னேற்றங்களில் உங்களைப் போலவே எங்களுக்கும் கடமை, அக்கறை இருக்கும். நீங்களும் நாங்களும் இணைந்தே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப போகின்றோம். எனவே உங்களுடன் ஒரு சில விடயங்களைப் பகிர விரும்புகிறேன்.

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் எதுவாகப்பிறக்கின்றனவோ அதுவாகவே இறக்கும் வரை வாழ்கின்றன. நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? உதாரணமாக ஒரு மாடு மாட்டுக்கன்றாகப் பிறக்கின்றது. அது மாடாகவே வாழ்கின்றது. ஈற்றில் அது மாடாகவே இறக்கின்றது.

அதன் வாழ்க்கைக் கோலத்தில் இறுதிவரை தனது முன்னோர்களைப் பின்பற்றியே வாழும்.  மாடுகள் எல்லாமே மாடுகள் தான், நாய்கள் எல்லாமே நாய்கள் தான். பிராணிகளின் வாழ்க்கை அப்படித்தான் அவற்றின் பிறப்பு முதல் இறப்பு வரை இயற்கை நியதிப்படி வாழ்கின்றது. அதில் எந்த மாற்றத்தையும் அவைகளால் ஏற்படுத்த முடிவதில்லை. ஏனென்றால் அவற்றுக்குப் பகுத்தறிவில்லை. ஆனால் மனித வாழ்வு அவ்வாறானதல்ல எல்லோரும் பிறக்கும் போது குழந்தையாகப் பிறக்கின்றோம். பின்பு ஆறு வயதில் பாடசாலைகளில் மாணவராகின்றோம். பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் மற்றும் தொழில்க் கல்விக் கூடங்களில் மாணவர்களாக வாழ்வைத் தொடர்கின்றோம்.

அதன் பின் சமூகத்துடன் இணைகின்றோம். இணைந்து இறப்பு வரை வாழ்வைத் தொடர்கின்றோம். குழந்தையாகப் பிறந்தவர்கள், மாணவர்களாக வாழ்ந்தவர்கள் சமூகத்தில் இணையும் போது வெவ்வேறு வேறுபாடுகளுடன் சமூகத்துடன் இணைகின்றனர். சிலர் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், வங்கி ஊழியர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தாதியர்கள். பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இவ்வாறு இணைகின்றனர். இன்னும் சிலர் மேசன், தச்சன், வியாபாரி, மீனவன், விவசாயி, கூலித்தொழில் செய்பவர்கள், உதவியாளர்கள் இவ்வாறாக சமூகத்தில் இணைகின்றனர்.

இவர்கள் எல்லோரையும் சமூகம் அவரவரின் தொழில்களையும் பதவிகளையும் கொண்டே அடையாளப்படுத்தும். இவற்றை விட இன்னுமொரு பிரிவும் சமூகத்தில் உண்டு. குற்றவாளி, காவாளி, கள்ளன், கொலைகாரன், கடத்தல்காரன், ஏமாற்றுக்காரன் இவர்களை சமூகம் இவ்வாறு அடையாளப்படுத்தும். நான் மூன்று வகையினரை உங்களுக்கு கூறினேன். இந்த மூன்று வகையானவர்களும் பிறக்கும் போது பிள்ளைகளாகவே பிறந்தவர்களே பின்பு மாணவர்களாக வாழ்ந்தவர்கள். அதன் பின்னர் சமூகத்துடன் இணைந்தவர்கள் இவர்களின் வாழ்க்கை எங்கு தீர்மானிக்கப்படுகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிகின்றதா?

ஒருவர் வைத்தியராவதா, விவசாயியாவதா, கள்ளன் ஆவதா என்பதை தீர்மானிப்பது அவரின் மாணவப் பருவத்தில் ஆகும். அம்மாணவப் பருவம் அதிபர், ஆசிரியர்கள் கைகளிலும் பெற்றோர்கள் கைகளிலும் தங்கியுள்ளது. இப்போது புரிகின்றதா நாங்களும் நீங்களும் எவ்வாறு  இணைந்து செயற்படவேண்டும் என்பது. பிறக்கும் போது யாரும் வைத்தியக் குழந்தைகளாகவோ, விவசாயக் குழந்தைகளாகவோ, கள்ளக்குழந்தைகளாகவோ பிறப்பதில்லை அவர்கள் மாணவப்பருவத்தைப் பயன்படுத்துவதிலேயே தங்கள் வாழ்வை உருவாக்கும் சக்தி அடங்கியுள்ளது.

வாழ்க்கை ஒரு வியாபாரம் போன்றது; ஒவ்வொருவரும் எதிர்காலத்திற்காக எவ்வளவு சக்தியை எவ்வளவு காலத்தை செலவிடுகிறார்களோ அவ்வளவு சிறப்பான எதிர்காலம் அமையும்.

எமது நாட்டில் உங்கள் பிள்ளைகளுக்கு பாடசாலையில் இலவசக் கல்வி, இலவச பாடநூல், இலவச சீருடை, இலவச உணவு, அதைவிட பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிலையங்களில் இலவசக்கல்வி இவ்வளவு வசதியிருந்தும் உங்கள் பிள்ளை மாணவப்பருவத்தைக் கடந்து சமூகத்தில் பிரவேசிக்கும் போது தோல்விகரமான நிச்சயமற்ற எதிர்காலத்துடன் நிரந்தர தொழில் எதுவுமின்றி பிரவேசிப்பது எவ்வளவு மோசமானது. தமது தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி படைத்த மாணவப்பருவத்தில் தமது தலைவிதியை தீர்மானிக்காமல் தோல்வியுடன் வெளியேறினால் நாங்களும் நீங்களுமே அதற்குப் பொறுப்பாளிகள்.

உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் சக்தி, காலம் என்பவற்றை செலவு செய்யுங்கள் அவர்களை என்னவாக உருவாக்கப் போகின்றீர்கள் என்பதை இன்றே கனவு காணுங்கள்.

அதற்காக நன்கு திட்டமிடுங்கள் மெல்ல மெல்ல உங்கள் இலக்கை நோக்கி அவர்களைக்கொண்டு செல்லுங்கள். ஓர் இலக்கின்றி மாணவப்பருவத்தில் பயணம் செய்வது கண்களை மூடிக்கொண்டு அம்புவிடுவது போன்றது. இலக்குகள் மனதில் ஆழமாய் இருந்தாலே உங்கள் பிள்ளை அதை அடைவதற்கான விசையை பெற்றுக்கொள்ளும். உங்கள் பிள்ளைக்கு ஒன்றை புரிய வையுங்கள் "இளமையில் ரோஜா மீது படுப்பவன் முதுமையில் முட்கள் மீது படுப்பான் இளமையில் முட்கள் மீது படுப்பவன் முதுமையில் ரோஜா மீது படுப்பான்"

பிள்ளைப்பருவத்தில் கஷ்டப்பட்டு படிப்பது எதிர்காலத்தை வளப்படுத்த என்பதை புரியவையுங்கள். இறுதியாக அறிஞர் சாக்ரடீஸ் சொன்ன விடயமொன்று "சக குடிமக்களே, நீங்கள் ஏன் செல்வத்தைச் சேர்ப்பதற்காக எல்லாக்கட்களையும் புரட்டி தேய்த்துப் பார்த்து கடைசியில் அந்தச் செல்வத்தையெல்லாம் யாரிடம் விட்டு விட்டுச் செல்லப்போகிறீர்களோ அந்தக் குழந்தை மீது அக்கறை செலுத்தாமல் இருக்கிறீர்கள்?"

உங்கள் கனவுகளை நிறைவேற்ற தேவையான வழிகளில் உதவுவோம் எனக் கூறி எம்மீது கொண்ட நம்பிக்கைக்கு மீண்டும் நன்றி.

லோ.விஜேந்திரன்
மட்/ஆரைப்பற்றை சுப்பிரமணியம் வித்தியாலயம்
ஆரையம்பதி - 01