ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுகிறார் ஜனாதிபதி!

ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு ஏற்ப குற்றம் சாட்டப்பட்டவர்களில் கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலர் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு ஏற்ப குற்றம்சாட்டப்பட்டவர்களில் கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலரே உள்ளடங்கியுள்ளனர்.

இவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியொன்றை அமைத்து 2015க்கு பின்னோக்கிச் செல்வோம் என்று குறிப்பிட்டு வருகின்றனர். அவர்கள் அவ்வாறு குறிப்பிடுவது அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று ஊழல் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவேயாகும்.

யார் எந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்ள முயற்சித்த போதும் மக்கள் பணத்தை திருடிய அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுக்கொடுத்து அப்பணத்தை மீண்டும் அறவிடும் பொறுப்பை நிறைவேற்றுவேன்.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களும் அரசாங்கத்தில் உள்ள சிலரும் மத்திய வங்கி பிணை முறி அறிக்கை தொடர்பாக அரசியல் மேடைகளில் கூக்குரலிட்ட போதும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல, 2008ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஒரு பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது” என்றார்.