பிடியாணை இல்லாமல் பொலிஸார் என்னை கைது செய்து அவமானப்படுத்தியதற்கு வழக்குத் தொடுக்கவுள்ளேன் - வேட்பாளர் நவாஸ்.

 பிடியாணை இல்லாமல் பொலிஸார் என்னை  கைது செய்து அவமானப்படுத்தியதற்கு வழக்குத் தொடுக்கவுள்ளேன் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நவாஸ்.

(பழுலுல்லாஹ் பர்ஹான் )

நீதிமன்றத்தால் அழைப்பாணை (சம்மன்ஸ்) வழங்கப்பட்டுள்ளவேளையில் நீதிமன்ற பிடியாணை (ஆணைப்பத்திரம்;) இல்லாமல் என்னை காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவர் கைதுசெய்து கூண்டில் அடைத்ததன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபையில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் தெரிவித்தார்.



காத்தான்குடி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று 23 செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் ஒருவரை தாக்கியதாக கூறி பொய் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் குறித்த வளக்கிற்கு எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி அஜராகுமாறு அழைப்பாணை (சம்மன்ஸ்)  அறிவித்தல் வழங்கிய போதிலும் காத்தான்குடி பொலிஸார் என்னை பலவந்தமாக கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கைது செய்து ஒரு இரவு முழுவதும் கூண்டில் அடைத்துவைத்து என்னை அவமானப்படுத்தியுள்ளனர்.

நான் நகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என தெரிந்திருந்தும் பொலிஸார் என்னை கைதுசெய்த சம்பவமானது ஒரு அரசியல் பழிவாங்கலாகவே கருதமுடிகின்றது.

கைது செய்த என்னை மறுநாள் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்  பிடியாணை (ஆணைப்பத்திரம்;) நீதிமன்ற உத்தரவு  இல்லாமல் நீதிமன்றம் ஊடாக வழக்கிற்கு அழைப்பு அழைப்பாணை (சம்மன்ஸ்) வழங்கப்பட்டபோதிலும் கைது செய்யவேண்டிய அவசியமில்லை' என கூறி என்னை விடுதலை செய்ததோடு குறித்த  வளக்கில் சம்மந்தப்பட்ட பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நவாஸ் ஆகிய நானும் மற்றைய எமது கட்சி வேட்பாளர்களான சிறாஜ்,கலீல் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 13ஆம் திகதி அஜராகுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பொலிஸார் என்னை கைது செய்தது தொடர்பில் அரசியல் காரணங்கள் உள்ளது என நான் நம்புகின்றேன்.

இதனால் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் என்னை மக்கள் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்களும் ஏற்படலாம். இந்த செயற்பாட்டால் நான் அவமானப்பட்டுள்ளேன் இதற்காக நான் எங்கள் கட்சியின் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றம் சென்று வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.