வருமானமற்ற நீரின் (Non-Revenue Water) இழப்பும் அதனை குறைப்பதில் பாவனையாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும்


1974 ஆம் ஆண்டின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சட்ட மூலம் மற்றும் 1995ம் ஆண்டின் திருத்த சட்டமூலம்  ஆகியவற்றினால் சட்டமாக்கப்பட்ட பொதுநீர் வழங்கலுக்காக நீர் மூலங்களிலிருந்து நீரைச்சேகரித்தல், நீரைசுத்திகரித்தல், சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், சேகரித்துவைத்தல், வீடுகளுக்கும் ஏனைய நீர் பாவனையாளர்களுக்கும் விநியோகித்தல் மற்றும் அவ்வழங்கலை பாரமரித்தல் ஆகியவற்றிக்கு பொறுப்பாகவுள்ள ஒரு தேசிய நிறுவனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையாகும்.
தற்போதைய நிலையில் நாட்டில் 85 சதவீதமான மக்கள் சுத்தமான  குடிநீரை பெற்று வருகின்றனர். மொத்த சனத்தொகையில் 48 சதவீதமானவர்களுக்கு குழாய் நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு குழாய் நீர் வழங்க ரூபா. 175,000.00 க்கும் 300,000.00 க்கும்  இடையிலான மூலதனச்செலவு மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தனது 337 நீர் வழங்கல் நிலையங்களினூடாக 23 இலட்சத்திற்கு மேற்பட்ட நீர் இணைப்புக்களுக்கு சுத்தமான நீரினை வழங்கிவருகின்றது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை 1982 ஆம் ஆண்டு வரை செலவினங்கள் செய்து நீரை இலவசமாக வழங்கி வந்தது. விலைப்பட்டியலை அறிமுகம் செய்தபிறகும் நீர் உற்பத்திச் செலவிற்கும் நீருக்காக அறவிடப்படும் கட்டணத்திற்கும் இடையில் பெரியதொரு இடைவெளி உள்ளது. எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு பிராந்தியத்தில் ஒரு அலகு (1000 லீட்டர்) சுத்தமான குடிநீரை உற்பத்திசெய்து விநியோகிப்பதற்கு ரூபா 28.00 கும் மேலானதொரு தொகை செலவு செய்யப்பட்டு பெரும்பான்மையான நுகர்வோருக்கு ஒரு அலகை குறைந்த கட்டணத்திற்கே வழங்கி வருகின்றது. உதாரணமாக சமூர்த்தி பயனாளியாயின் ஒரு அலகுக்கு (1000 லீட்டர்) ரூபா 05.00 பொருத்தமான வரிகளுடன் அறவிடப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வருமானமற்ற நீர் (Non-Revenue Water) என்றால் என்னவென்று நோக்குவோமாயின், சுத்திகரிப்பு செயல் முறையினூடாக உற்பத்தி செய்து விநியோகிக்கப்படும் நீரினால் எந்தவிதமான வருமானத்தையும் நாட்டிற்கு ஈட்டித்தராது விரையமாக்கப்படுமாயின் அது வருமானமற்ற நீர் எனப்படும். அதாவது உற்பத்தி அலகிற்கும் பாவனையாளர் நுகர்விற்கும் இடையிலான வித்தியாசமாகும்.

இது உலகளவிய ரீதியில் காணப்படும் முக்கியமானதொரு பிரச்சினையாக உள்ளது. அதாவது சர்வதேச அளவில் வருமானம் அற்ற நீரினால் வருடாந்தம் 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்படுவதாகவும் ஆசியாவிலுள்ள பல நகரங்களில் 10 சதவீதம் தொடக்கம் 60 சதவீதம் வரையான நீர் வருமானமற்ற வகையில் இழக்கப்படுவதாகவும் உலக வங்கி தனது அறிக்ககையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகளாவிய ரீதியில் இதனை அரைவாசியாக குறைப்பதனூடாக 90 மில்லியன் மக்களுக்கு நீர் வசதியினை ஏற்படுத்தி கொடுக்க முடியும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகில் மிகவும் குறைந்த மற்றும் ஏனைய நாடுகளினால் மெச்சப்படும் அளவிற்கு வருமானமற்ற நீரின்  இழப்பினை வெறும் 4.6 சதவீத அளவில் கொண்டுள்ள நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றது.

இந்த வருமானமற்ற நீரின் இழப்பு வீதமானது இலங்கையில் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபட்ட நிலையில் காணப்படுகின்றது. அதாவது கொழும்பில் 45 சதவீதமும்; பதுளை பிராந்தியத்தில் 27 சதவீதமும் மட்டக்களப்பு பிராந்தியத்தில்  18 சதவீதமும் உள்ளது. இதனை தேசிய ரீதியில் நோக்கும் போது 27.8 சதவீதமாக காணப்படுகின்றது.

வருமானமற்ற நீர் தொடர்பான பிரச்சினை இன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக துறைசார்ந்த வர்களால் பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த வருமானம் அற்ற நீரின் இழப்பிற்கு பொறியியல் சார்ந்த விடயங்களே பின்னணியாக உள்ளன என சிலர் கருதுகின்றனர். ஆனால் அது மாத்திரமன்று சமூக கலாசார மற்றும் நடத்தை ரீதியான சில காரணிகளும் இதற்கு பின்னணியாக உள்ளன.

வருமானம் பெறப்படாத நீரின் இழப்புக்கான பொதுவான காரணங்கள்
நீர் ஒழுக்கு மற்றும் கசிவுகள் (வெளிப்படையான மற்றும் கண்ணுக்குப் புலப்படாத) - leakage
சட்ட விரோதமான முறையில் நீர் இணைப்பினை பெறுதல்
நிர்வாக ரீதியான சில செயற்பாடுகள் (மானி செயற்படாமை, மானி வாசிப்பினை குறைத்து கணிப்பிடல்)
மானியின் பிழையான வாசிப்பு

போன்ற பல காரணிகள் உள்ளன. அத்துடன் வருமானம் பெறப்படாத நீர் இழப்புக்கான காரணிகளில் நீர் கசிவு மற்றும் சட்ட விரோதமான நீர் இணைப்புக்கள் போன்றன கூடுதலான செல்வாக்கினை செலுத்துகின்றன.
நீர் கசிவுகள் தொழில் நுட்பம் ரீதியான செயற்பாடுகள், பதிக்கப்பட்ட குழாய்; அதன் உதிரிபாகங்களின் தரம் மற்றும் ஆயுட்காலம் போன்றவைகளின் பின்னணியில் ஏற்பட்டாலும் முழுமையாக அவை மாத்திரம் காரணியாக அமையாது. அதில் மனிதர்களின் செயற்பாடுகளும் உள்ளன. அதாவது தமது தனிப்பட்ட தேவைகளுக்காக வீதியோரங்களில் நீர் விநியோக குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களை தெரியாமல் அவ்விடங்களில் குழிகளை வெட்டும் போது அக்குழாய்களில் எதிர் பாராத உடைவுகள் மற்றும் நீர் கசிவுகள் எற்படுகின்றது. இவ்வாறான நிலையில் தண்டம் செலுத்த வேண்டும் என்ற அச்சம் காரணமாக அதனை அவ்வாறே விட்டு விடுதல் அல்லது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு தெரிவிக்காமல் அவர்களே அதற்கான பரிகாரத்தை மேற்கொள்ளுதல். அதனால் அவ்வாறான இடங்களில் மீண்டும் நேரடியான அல்லது கண்ணுக்கு புலப்படாத நீர் கசிவுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

அத்துடன் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள விநியோக குழாயில் நீர்மானிக்கு கீழான பகுதியில் (தேசிய நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான) நீர் கசிவுகள் ஏற்படுதல்; அதன் போது அதனை உரிய பிரதேச நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்காமல் அலட்சியமாக இருத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களாலும் இந்த வருமானமற்ற நீர் இழக்கப்படுவதற்கு காரணங்களாகவும் உள்ளன.

மேலும் வருமானமற்ற நீர் இழப்பிற்கான மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளில் மற்றுமொரு முக்கியமான காரணி சட்டவிரோதமான முறையில் நீர் இணைப்பினை பெறுதலாகும். இதனை தேசிய ரீதியில் நோக்கும் போது 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் முறையே 1196, 804  மற்றும் 525 க்கு மேற்பட்ட சட்டவிரோதமான நீர் இணைப்புக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இச்செயற்பாட்டினை சாதாரண நீர் தேவையுடை பாவனையாளர்கள் மேற்கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இன்னும் மானியின் உரிய இயக்கப்பாட்டின் வேகத்தை தொழில் நுட்ப ரீதியாக குறைத்து நீரினை பெறுதலும் வருமானம் அற்ற நீரின் இழப்பிற்கான காரணிகளில் ஒன்றாகும். இவ்வகையான செயற்பாடுகள் இனம் காணப்படுமிடத்து உரியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டமும் அறவிடப்படும் என்பதும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

இவைகளை கண்டறிவதற்கென பிரத்தியேக ஆளணியினரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வகையான செயற்பாடுகளை இனம் காண்போர் அதனை தெரியப்படுத்துமிடத்து அவர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த வருமானமற்ற நீர் மற்றும் அதன் இழப்பு தொடர்பாக பெரும்பாலான பாவனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிலும் படித்த இளம் தலைமுறையினர்கள் கூட தெளிவில்லாமலுள்ளனர் என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வருமானம் பெறப்படாத நீர் இழப்பு காரணமாக சீரான நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்படல், திருத்த வேலை காரணமாக வீதி போக்குவரத்தில் நெரிசல் எற்படல், பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுதல், சுகாதார ரீதியான பாதிப்புக்கள் தோன்ற வாய்ப்பிருத்தல்இ தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நிதி ரீதியாக உறுதியற்ற நிலைக்கு தள்ளப்படுதல் மற்றும் தேசிய வருமானம் குறைதல் போன்றன இடம் பெறுகின்றன.

வருமானமின்றி இழக்கப்படும் நீர் தொடர்பான விடயம் விரைவில் தீர்க்கப்பட வேண்டிய முதன்மையான ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மானிலா நகரில் இந்த வருமானமற்ற நீர் இழப்பு சதவீதமானது 1997 ஆம் ஆண்டு 63 சதவீதமாக காணப்பட்டுள்ளது. அதனை குறைப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட வினைத்திறன் மிக்க செயற்பாடுகளினால் அது 2011 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இது இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
எமது நாட்டிலும் வருமானமற்ற நீரின் இழப்பு சதவீதத்தினை குறைப்பதற்காக நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையிலும் நீடித்த நிலையான தீர்வின் பின்னணியிலும் பல்வேறு வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக கொழும்பில் வருமானம் பெறப்படாத நீர் இழப்பு சதவீதத்தினை 2021 ஆம் ஆண்டளவில் 18 சதவீதமாக கொண்டு வருவதற்கு GCWWMIIP என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் ஏனைய நகரங்களிலும் அவைகளின் நிலைமைக்கேற்ப பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் எதிர் பார்க்கப்பட்ட முன்னேற்றங்களும் எற்பட்டுவருகின்றன.

இருப்பினும் இந்த வருமானமற்ற நீரின் இழப்பினை குறைப்பதில் பாவனையாளர்கள் மற்றும் பொதுமக்களது பங்களிப்பானது ஒரு முக்கியமான விடயமாக நோக்கப்படுவதோடு உரியவர்களின் சமூக கலாசார நடத்தையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படவேண்டும். மேலும் இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்இ விளம்பர பதாதைகள்இ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தெருவோர நாடகங்கள் போன்றன இடம் பெற்றுவருகின்றன.

இருப்பினும் சமூக மட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுகின்ற கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தேசிய நலன் கருதி இது குறித்தும் தங்களால் முடியுமான பங்களிப்பினை நல்குமாறும் ஞாபகமூட்டப்படுகின்றனர். இதனால் சமூக கலாசார மற்றும் நடத்தையில் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தினை குறுகிய காலத்திற்குள் கொண்டுவரலாம் என்பது யதார்த்தமாகும்.

மேலும் வருமானமற்ற நீரின் இழப்பிற்கு ஏதுவாக அமையும் காரணிகள் தென்படும் போது அது குறித்த  தகவல்களை உரிய பிரதேச நீர் வழங்கல் நிலையத்திற்கோ அல்லது எதுவித கட்டணமும் அறவிப்படாத 1939 என்னும் இலக்கத்திற்கோ தெரியப்படுத்தலாம். இதனூடாக தேசிய முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்த பெருமையினை நீங்கள் உணர்வீர்கள்.
வருமானம் பெறப்படாத நீரின் இழப்பினை ஒரு சதவீதத்தினால் குறைப்பதன் ஊடாக புதிதாக 20,000 நீர் இணைப்புக்களை வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

அந்த வகையில், 2020 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 60 சதமவீதத்திற்கும் மற்றும் 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் சுத்தமான குழாய் குடிநீரினை வழங்க அதனை முதன்மைப்படுத்தி அதற்கான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருமானமற்ற நீரின் இழப்பு சதவீதத்தினை விரைவாக குறைப்பதனுடாக 'அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரினை வழங்கும்' இலக்கினை இலகுவாக அடைய முடியும் என்பது வெள்ளிடை மலையாகும்.

MSM. சறூக், சமூகவியலாளர் 
பிராந்திய முகாமையாளர் அலுவலகம், மட்டக்களப்பு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை