மாணவனிடம் பாலியல் சேஷ்டை புரிந்த ஆசிரியர் ! மாணவன் வைத்தியசாலையில்

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது மாணவன் ஒருவன்   அழுகையை நிறுத்தமாட்டாதவனாக வதங்கிப்போய் அவமானத்தில் குறுகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் படுத்துக் கிடக்கிறான்.

ஏறாவூர் றகுமானியா பாடசாலையிலிருந்து விலகி அலிகார் தேசிய பாடசாலைக்கு பெரும் விருப்பத்துடன் மாறியுள்ளான். ”அலிகாரியன்” என்று தானும் பெருமையாகச் சொல்லவேண்டும் என்ற விருப்பம் அவனுக்குள்ளும் உண்டாகி வீட்டில் சண்டைகள் புரிந்து பள்ளியை மாற்றக் காரணமாக இருந்திருக்கலாம். எது எப்படியோ பள்ளி மாறிய சிறுவனுக்குப் புதிய பள்ளியின் சூழலும் புதிய நண்பர்களும் ஆசிரியர்களும் பழக்கமாகுவதற்கு முன்பே, அலிகாரில் கற்பிக்கும் ஆசிரியர்    இப்படியான செயலை புரிந்துள்ளார்


சென்ற சனிக்கிழமை ( 13.01.2018 ) , ”நீ கணிதப் பாடத்தில் வீக்காக இருக்கிறாய். உனக்கு விசேஷட வகுப்புத் தருகிறேன்” என்று தனியாக அழைத்து இரண்டு மணி நேரமாக பாலியல் சேஷ்டைகள் புரிந்துள்ளார்.


இந்த ஆசிரியர் கடந்த முப்பது வருடங்களாக பணியில் உள்ளவர். இவரால் பல சிறுவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாடசாலை நிர்வாகம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று முறைப்பாடு செய்யும் பெற்றோர்களிடம் ”அல்லாஹ்வுக்காகச் ஸபூர் செய்யுங்கள். இனி இப்படி நடக்காது” என்று மன்றாட்டங்கள் செய்து இவரைக் காப்பாற்றி வந்துள்ளது. இந்த ஆசிரியர் மீது 20 வருடங்களுக்கு முன்பும் பொலிஸில் இதே விவகாரத்துக்காக முறைப்பாடு செய்யப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டதும் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு என்றால் இன்று வரைக்கும் இந்த ஆசிரியர் எத்தனை சிறுவர்களிடம் இப்படியான சேஷ்டைகள் விட்டிருப்பார் .

பள்ளி நிர்வாகம் முன்பே இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் பல சிறார்களை இவரிடமிருந்து காப்பாற்றியிருக்கலாம். ”அடுத்தவனின் மானத்தைக் காப்பாற்றினால் உனது மானத்தை அல்லாஹ் காப்பாற்றுவான்” என்பதற்கான அர்த்தத்தை பிழையாகக் விளங்கிக் கொண்ட தற்குறி உலமாக்கள், ஆலிம்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் தகுந்த பாடம் புகட்டவேண்டிய தருணம் இது. இது ஆசிரியரின் மானம் சார்ந்ததோ, பாடசாலையின் மானம் சம்பந்தப்பட்டதோ இல்லை. சிறுவனின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. சிறுவர்களின் உளவியலைச் சிதைக்கும் காரியங்கள் எதிர்காலத்தில் உண்டாக்கும் விளைவுகள் பாரதூரமானவை.

இந்த ஆசிரியர்   அரபிக் கலாசாலை ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்த அரபிக் கலாசாலையில் 100 வரையிலான மாணவர்கள் உள்ளார்கள். பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் இவர் ஒரு உறுப்பினர் என்றும் தெரியவருகிறது. பள்ளி வாசல்கள் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவரே ஒரு பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடி ஒழித்தவர்தான் ஒரு காலத்தில். இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படித்தான் இந்த சமூகம் உருப்படும்?

பாதிக்கட்ட சிறுவனை நஷ்ட ஈடுகொண்டு தேற்றிவிட முயல்கிறவர்கள் அத்தனை பேர் மீது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமிழைத்த ஆசிரியர் பெரும் செல்வாக்குப் பெற்றவர் என்றும்   அறிந்தேன்.  ஏறாவூர் பள்ளி வாசல்கள் சம்மேளனம், அலிகார் பாடசாலை நிர்வாகம் அனைத்தின் மீதும் வழக்குத் தொடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆசிரியரை பதவி நீக்கம் செய்து, ஓய்வூதியம் பெறமுடியாதபடி ஒரு தீர்ப்பை கொண்டு வரமுடியுமாக இருந்தால் நாடுபூராகவும் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக மாறும்.

சிறுவர்கள் நமது சொத்து. நாளைய நமது செல்வங்களைச் சுரண்டும் இந்தக் கயவர்களை எதிர்த்துப் போராட முடியாத நமது அறச்சீற்றத்தையும் எழுத்தையும் குப்பையில் தான் போடமுடியும்.

1929 என்ற இலக்கத்திற்கு (Child Help Line) அழைத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பியுங்கள். ஏறாவூரில் மனிதாபிமானம் கொண்ட இளைஞர்கள் இருப்பீர்களாக இருந்தால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கொழும்பு அலுவலக இயக்குநருக்கு ஒரு கடிதத்தை உடனடியாகப் பெக்ஸ் மூலம் அனுப்புங்கள். பலர் கூடிக் கையெழுத்திட்ட மனுவாக அது இருந்தால் நன்று.

- Sharmila -