பாராளமன்றத்தில் கைகலப்பு, வாய்த்தார்க்கம். ஊழல் மோசடி தொடர்பில் குற்றசாட்டுக்கள்

மக்களின் பணம் எப்படி கொள்ளையிடப்பட்டது என்பது தொடர்பான உண்மைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதுடன், இருதரப்பு உறுப்பினர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால், காயங்களும் ஏற்பட்டன.



நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு, இன்று புதன்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயங்கள் குறித்து கருத்துக் கூறினார்.

ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்காமல் விவாதம் நடத்த முடியாதென கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ்குணவர்த்தன, ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

மக்கள் பணம் கொள்ளையிடப்பட்டதை ஏற்க முடியாதென்றும் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரும் காரசாரமான தொணியில் வலியுறுத்தினர்.

இவர்களின் கருத்துக்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அறிவித்தார். ஜனாதிபதி அனுப்பிவைத்த கடிதத்தையும் சபாநாயகர் சபையில் வாசித்தார்.

ஆனாலும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் விளைவித்தனர். அந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 2006ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுக்கும் வரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்மோசடி மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரக்கச் சத்தமிட்டனர். சபை நடுவாகச் சென்று கையில் வைத்திருந்த நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திர புத்தகங்களை வீசினர்.

உரையாற்றுவதை குழப்புவதற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி காவல் புரிந்தனர். தொடர்ச்சியான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தார்.

ஆனாலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊழல் மோசடி குறித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தற்போது ஏற்க முடியாதெனவும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக பேசுவதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் ஜே.வி.பி. கூறியது. கூட்டு எதிர்க்கட்சியும் அவ்வாறு தெரிவித்தது.

எதிர்த்தரப்பு, அவ்வாறு கூறியதையும் பொருட்படுத்தாமல், மஹிந்த ராஜபக்ச கள்வன் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைகளை உயர்த்தியவாறு உரக்கச் சத்தமிட்டார். ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு கூறி கோசம் எழுப்பினர். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சர்ச்சைகளை, நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் அமைதியாக பாத்துக்கொண்டிருந்தாக  தெரியவருகிறது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.பி.வி. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டபோது அமைதியாக இருந்து அவதானித்துக் கொண்டிருந்தனர்.

கூச்சல் குழப்பத்தினால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. பின்னர் சபை கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்