தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பலருக்கு சவாலாக இருக்கின்றது.


எமது பிரதேசங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் வார்தைகள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடுவதாகவே இருக்கின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பலருக்கு சவாலாக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளர் அந்தோனி கிருரஜன் தெரிவித்தார்.


புளியந்தீவு தெற்கு வட்டாரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது புதிது ஆனால் சமுக சேவை என்பது பழகிய ஒன்றே எமது புளியந்தீவு தெற்கு வட்டாரமானது மட்டுநகரின் மத்தியில் அமைந்தாலும் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது. வருமானம் குறைந்த குடும்பங்கள் அதிகம் காணப்படுகின்றதும், கல்வி அபிவிருத்தியில் பின்தங்கிய நிலைமையுமே இங்கு அதிகளவில் காணப்படுகின்றது.

இது மாநகரத்தின் மத்தியில் இருப்பதனால் இது நகரப் பிரதேசம் தானே என யாரும் கவனிப்பதில்லை. எமது மக்கள் இதற்கு முன்னர் பலரை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்தலுக்கு களமிறக்கி வெற்றியடையச் செய்தும் உள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளிவிற்கு எமது பிரதேசத்திற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த எமது மக்களின் எதிர்பார்ப்பினை கூடிய அளவு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் மேற்கொள்வதற்காகவே இத்தேர்தலில் ஒரு இளைஞர் என்ற வகையில் எமது தேசியத்தின் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்கியுள்ளேன்.

ஆனால் எமது பிரதேச மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு எமக்குள்ளே இருக்கும் எம்மவர்களை வைத்தே சிலர் முயற்சித்து வருகின்றார்கள். எமது விரல்களைக் கொண்டே எமது கண்களைக் குத்தும் செயற்பாடுகளே அரங்கேற்றப்படுகின்றது. இவ்வகையான செயற்பாடுகளை எமது மக்கள் உணர்ந்து, ஒருமித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே ஒரு அரசியற் கட்சி அல்ல அது தமிழ் மக்களின் விடிவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு விடுதலை அமைப்புமாகும். தற்போது அது அந்த நோக்கத்தை மையமாகக் கொண்டே உழைத்துக் கொண்டிருக்கின்றது. அதனைப் பலப்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

எமது பிரதேசங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் வார்தைகள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடுவதாகவே இருக்கின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பலருக்கு சவாலாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லுபவர்கள் தாம் இந்த மக்களுக்காக எதைச் செய்தார்கள்? எதைச் செய்யப் போகின்றார்கள்? என்பது பற்றி சொல்வதில்லை. ஏனெனில் சொல்லும் அளவிற்கு அவர்கள் எதுவுமே செய்யவில்லை, அதுதான் உண்மை.

மக்களும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாடுகின்றவர்கள் முன்னர் என்ன செய்தார்கள்? எப்படி வந்தார்கள்? எப்படி மக்களை வழிநடத்தினார்கள்? இவர்களால் தமிழ் மக்கள் அடைந்த பலாபலன் என்ன? என்பனவெல்லாம் மக்கள் தான் உணர்ந்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடம் அவர்களுக்கு விரைவில் புகட்டப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அபிவிருத்தி செய்ய முடியாது என்று இதுவரை காலமும் சொல்லி வந்தார்கள் அதற்கு தக்க பதில் மாகாண சபையில் இரண்டரை வருடங்களில் புரிய வைக்கப்பட்டது. ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்திகளை மறைத்து தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கப் பார்க்கின்றார்கள். ஏனெனில் இந்த உள்ளுராட்சி மன்றங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் சென்று விட்டால் நியாயமான, மக்களுக்கான ஆட்சி நடைபெற்று அபிவிருத்திகள் இடம்பெற்றுவிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றி விமர்சிப்பவர்களின் போலி வேசங்கள் கலைக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் இந்த விமர்சனங்களையெல்லாம் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று, விமர்சிப்பவர்களின் போலி வேசங்களைக் கலைத்து, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை முன்னெடுப்பதுடன், எமது பிரதேசங்களை அபிவிருத்திப் பதையிலும் இட்டுச் செல்லும் என்ற உண்மையினை வெளிப்படுத்தும் என்று தெரிவித்தார்