25% பெண் பிரதிநிதித்துவத்தை குறைக்க முடிவு செய்யவில்லை

உள்ளூராட்சி சபைகளில் பெண்களில் 25 வீத பிரதி நிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று சபையில் அறிவித்தார். 25 வீத பிரதிநிதித்துவத்தை நிரப்ப முடியாத சபைகள் தொடர்பில் மாத்திரம் தேவையான திருத்தங்கள் செய்யவே கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை மாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தொடர்பில் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணி எம்.பி டளஸ் அலகப்பெரும கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல,

25 பெண்கள் பிரதிநிதித்துவத்தை சட்டத்தில் உள்ளவாறே பேணுவதற்கு கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சில சபைகளில் 25 வீதம் பெண்களை நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. அதற்காக பெண்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.


இது தொடர்பில் கேள்வி எழுப்பிய டளஸ் அலகப்பெரும எம்.பி,

பெண்களில் 25 வீத பிரதிநிதித்துவத்தை பேணாதிருக்க கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் பொதுஜன பெரமுனவின் 3 வேட்பு மனுக்கள் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினையால் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு பெண் பிரதிநிதித்துவத்தை பேணாதிருக்க முடிவு செய்வது நியாயமற்றது.

30 வருடங்களாக நீடித்த 30 வீத இளைஞர்களுக்கான ஒதுக்கீடு நீக்கப்பட்டு பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டது. 25 வீத பெண் பிரதிநிதித் துவத்தை பெரிய வெற்றியாக அரசாங்கம் கொண்டாடியது.இன்று அதனை மாற்றுவது நியாயமற்றது என்றார். தினேஷ் குணவர்தன எம்.பி குறிப்பிடுகையில், உறுப்பினர் தொகை தொடர்பான பிரச்சினையின் போது எவ்வாறு செயற்படுவது என ஆராயப்பட்டது.சட்ட திருத்தம் பற்றி பேசப்படவில்லை என்றார். வாசுதேவ நாணயக்கார எம்.பி பேசுகையில்

ஊடகங்கள் தவறான செய்தியே வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் திருத்தம் வெளியிடப்பட வேண்டும் என்றார். கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி குறிப்பிட்டதாவது, இருக்கும் சட்டத்தை அதே போன்று தொடரவும் சிக்கலாக இருக்கும் இடங்களில் விசேடமாக கருதி செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்ததாவது. சபை முதல்வர் கூறியது போன்று பெண் பிரதிதிநிதித்துவத்தை குறைக்க சட்டம் கொண்டு வர முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றார்.

இதற்குப்பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய,

திருத்தம் வெளியிடுவது தொடர்பில் பத்திரிகைகளுக்கு அறிவிப்பதாக குறிப்பிட்டார்.