கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகளின் கிரிக்கட் சுற்றுப்போட்டி

(ஜெ.ஜெய்ஷிகன்)

கிழக்கு மாகாண சுற்றுலா நட்சத்திர விடுதிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் நேற்று முழு நேர போட்டியாக இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுற்றுலா நட்சத்திர விடுதிகள் சங்கத்தின்; தலைவர் றொசான் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பாசிக்குடா சுற்றுலாத்துறை முகாமையாளர் எஸ்.மாஹுர் மற்றும் நட்சத்திர விடுதிகள் முகாமையாளர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


சங்கத்தினால் நான்காவது தடவையாக கிழக்கு மாகாணத்திலுள்ள பதினொன்று சுற்றுலா நட்சத்திர விடுதிகளுக்கிடையில் ஐந்து ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது நடாத்தப்பட்டது.

பதினொரு நட்சத்திர விடுதிகள் போட்டியிட்டு விளையாடியதில் பாசிக்குடா அமாயா வீச் மற்றும் பாசிக்குடா அனந்தயா ஹோட்டல் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியது.

இதன்போது அமாயா வீச் இரண்டு விக்கட் இழப்புக்கு எழுபத்திநான்கு ஓட்டங்களையும், பாசிக்குடா அனந்தயா ஹோட்டல் எட்டு விக்கட் இழப்புக்கு இருபத்தி எட்டு ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. இதில் பாசிக்குடா அமாயா வீச் இம்முறைக்கான சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.


இப்போட்டியில் வெற்றி பெற்ற நட்சத்திர விடுதிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான வெற்றிக் கேடயம் மற்றும் பணப் பரிசில்கள் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.