மஹிந்தவின் மிரட்டல்; பதற்றத்தில் சம்மந்தன்; திரிசங்கு நிலையில் அரசாங்கம்!

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து தெற்கில் பாரிய அரசியல் நெருக்கடி நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்‌ஷவின் தனிக்கட்சி இரு பெரும் தேசியக் கட்சிகளைத் தோற்கடித்து சிங்கள மக்கள் மத்தியில் ஏகபோக அதிகாரத்தினைப் பெற்றிருப்பதே.

இந்த நிலையில் இலங்கையின் பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்க அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டும் என தேசிய அரசாங்கம் சார்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் தனது பிரதமர் பதவி தொடரும் என ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கூறிவருகிறார்.

தெற்கில் இவ்வாறான ஆட்சிச் சிக்கல் தோன்றியுள்ள நிலையில் நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்க மிரட்டலினை விடுத்துள்ளார். அதாவது, "பிரதமரைப் பாதுகாக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் நாங்கள் எடுக்கும் தீர்மானம் தேசிய அரசாங்கத்திற்கு ஆபத்தானதாக அமையும்" என எச்சரித்துள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியில் முழுக்க முழுக்க இனவாத பிரசாரத்தை மையப்படுத்தியே மஹிந்தவின் கட்சி தேர்தல் வாக்கு வங்கியினை நிரப்பியுள்ள நிலையில் தற்பொழுது அவரது இந்த மிரட்டலானது நல்லாட்சி அரசாங்கம் எனப்படும் தேசிய அரசாங்கத்தினை மட்டுமன்றி நாட்டின் எதிர்க்கட்சியாகவுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஆபத்தான ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ளது என்றுதான் சொல்லமுடியும்.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினைத் தீர்மானிக்கும் பாரிய சக்தியாகவுள்ள பெருந்தேசியவாதம் எந்தப் பக்கம் சாய்கின்றதோ அதற்கேற்பவே  நாட்டின் அரசியல் நிலைமைகளும் தொடரப்பட்டுவந்துள்ளன. நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை விடயத்திலும் இந்த பெருந்தேசியவாதத்தின் சார்பு நிலையே செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டின் இரு பெரும் தேசியக் கட்சிகள் தனி ஒரு கட்சியிடம் தோல்வியினைச் சந்தித்துள்ளன என்றால் அந்த தனிக் கட்சியின் பக்கம் சார்கின்ற பெருந்தேசிய வாதத்தின் சார்பு நிலையினை நாம் இந்த இடத்தில் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். தனக்கு தற்பொழுது கிடைத்துள்ள மக்கள் ஆதரவுச் சக்தியினைக் கொண்டு மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதான செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருக்கிறார்.

அதாவது, நாட்டின் எதிர்க்கட்சி பதவியினை தமது கூட்டு எதிர்க்கட்சியினர்க்கு வழங்கவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையினை அரசாங்கம் எந்த வழியில் எடுத்துக்கொண்டாலும் அது அரசாங்கத்திற்குப் பாதகமான ஒன்றாகவே அமையும். குறிப்பாக மஹிந்தவின் கோரிக்கையினை ஏற்று ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினை நாட்டின் எதிர்க்கட்சி அந்தஸ்திற்குக் கொண்டுவந்தால் ஏராளமான கட்சித் தாவல்கள் நிகழ்வதோடு நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கென தனியான ஒரு ஆதரவுத் தளத்தினை உருவாக்கிக்கொள்வார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவினை விலக்கிக் கொள்ள நேரிடும். இதனால் அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தீர்மானங்கள் தோற்கடிக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம்.

இதற்கு மாறாக மஹிந்தவின் நேற்றைய கோரிக்கையினைத் தட்டிக்கழித்து அரசாங்கம் தொடர்ந்தும் தனது பயணத்தினைத் தொடருமாயின் நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொள்ளும் பிரசாரம் இன்னும் பாரதூரமான பின்னடைவுகளையே அரசாங்கத்திற்குத் தேடிக் கொடுக்கும். அது அடுத்த தேர்தல் காலத்தில் பாரதூரமான ஒரு அரசியல் மாற்றத்தினையே நாட்டிற்குக் கொண்டுசேர்க்கும்.

எது எவ்வாறாயினும் நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் எனப்படும் தேசிய அரசாங்கத்திற்கும், அதற்கு ஆதரவாயுள்ள எதிர்க்கட்சிக்கும் தற்போதைய அரசியல் நெருக்கடி பாதகமான ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ளது என்பது கண்கூடு. இந்த நிலையில் யார் எவரின் பதவி தொடரும்; யார் எவரின் பதவி பறிக்கப்படும் என்பதை எதிர்வரும் வாரங்கள் துலக்கமடைய வைக்கும் என்பதே உண்மை!